பேசுபொருளாகும் NDA கூட்டணி குழப்பங்கள்.. என்ன நடக்கிறது?
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன். இதைத் தொடர்ந்து செங்கோட்டையனின் பதவியை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி பறிக்க, அவரோ டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து முறையிட்டார். அது அதிமுகவின் உட்கட்சி பூசலுக்கு பாஜகவே காரணம் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை மேலும் கூர்மைப்படுத்தியது.
இது ஒருபுறமிருக்க கூட்டணியில் இருந்து வெளியேறிய தினகரன், பழனிசாமிக்கு எதிராக தினமும் ஒரு குண்டுபோட்டு வருகிறார். பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா சொல்லவே இல்லை என்ற அவர், பழனிசாமி முதல்வர் வேட்பாளர் இல்லை என்று அறிவித்தால் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரத் தயார் என்றார். தானும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணியிலிருந்து விலக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனே காரணம் என்றார். இன்னொரு பக்கம் அண்ணாமலையைப் புகழ்ந்து பாஜகவுக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
இந்த பரபரப்பான சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணிக் குழப்பத்தை சரிசெய்யும் முயற்சியில் அமித் ஷா இறங்கியிருப்பதாகவும், அதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பழனிசாமி, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடனும் பாஜக மேலிடம் பேசவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது!
இத்தகைய சூழலில் வரும்14ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னைக்கு வர உள்ளார். சென்னையில் நடைபெறும் ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வரிக்குறைப்பு குறித்து விளக்க இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிந்ததும், மாநில பாஜக நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் செங்கோட்டையன் நிர்மலா சீதாரமனை சந்தித்திருந்த நிலையில், அவரது சென்னை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.