ராமதாஸ்
ராமதாஸ்pt web

”நமக்கான வாகனம் வந்துவிட்டது” - தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்.. நாளை முக்கியக் கூட்டம்!

நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தான், வட மாவட்டங்களில் வலுவாகவுள்ள பாட்டாளி மக்கள் கட்சி உட்கட்சிப் பூசலால், ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதில், அன்பு மணி தரப்பு பாமக ஏற்கனவே, என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு இன்னும் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் இருந்து வருகிறது. இந்த சூழலில் தான், திமுக கூட்டணியில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், விசிகவின் நிலைபாடு காரணமாக திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணைய முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. அதற்கேற்ற வகையில், பாமகவினரும் பொதுவெளிகளில் தவெகவை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் பேசிவருகின்றன.

விஜய்
விஜய்Pt web

இந்த சூழலில் தான், நாளை தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்துப் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வேளையில், இன்று ராமதாஸ் அவரது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், நமக்கான வாகனம் நம் அருகே வந்துவிட்டது என தெரிவித்திருகிறார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது. தொடர்ந்து, அந்தக் கடிதத்தில், ” என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே…? எப்போதும் எல்லோரும் என்னோடுதான் அணிவகுக்கின்றீர்கள். அணிவகுப்பீர்கள்.

ராமதாஸ்
S.I.R | 103 தொகுதிகளில் 10%க்கும் மேலாக வாக்காளர் குறைவு.. என்ன தாக்கத்தை உண்டாக்கும்?

நாம் சற்றே நம் கடந்த காலத்தை திரும்பி பார்ப்போம். சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் 2 இட ஒதுக்கீடுகள் என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை நாம் தான் போராடி வென்றெடுத்தோம். சாதி, சமய, ஒற்றுமையுடன் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டி சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினோம். இன்னும் வெல்ல வேண்டியவை பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லா தமிழகம், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரி கல்வி, ஒரே மாதிரி தரமான மருத்துவம், வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, அனைவருக்குமான பொருளாதார முன்னேற்றம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி நஞ்சில்லா உணவு உற்பத்தி,நெரிசலற்ற போக்குவரத்திற்கான சாலைகள், பண வீக்கமற்ற பொருளாதார வளர்ச்சி, வன்முறை இல்லா பாதுகாப்பான வாழ்க்கை என ஏராளமான இலக்குகள் உள்ளன.

ராமதாஸ்
ராமதாஸ்pt web

நம் பலம் அப்படியேதான் உள்ளது. உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப, நம்மை நாம் அறிந்து போராடி நமக்கான இலக்கை அடைவோம். சோர்வு என்பது நம் அகராதியிலே இல்லை. உங்கள் மனதளவில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். நாம் பயணிக்கவேண்டிய தூரம் நீண்டது. அதனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்கப்போகிறோம். நம் இலக்கை அடைந்து இலட்சியத்தை வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்
“தவெகவினர் மீது கைவைத்தால் 2000 பேர் வருவாங்க..” - தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த்

இந்த நிலையில், வாகனம் என்பதை கூட்டணியைக் குறிப்பிட்டு கூறுகிறார் எனவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைப்பது தொடர்பான அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேசமயம், ராமதாஸுக்கு தவெக மட்டுமே ஒரே வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, தவெக உடனும் இன்னும் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. எனவே, தவெக கூட்டணியில் இணைகிறாரா? எனவும் கேள்வி எழுந்து வருகிறது. இதற்கான விடைகள் நாளை நடைபெறும் கூட்டத்தில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ராமதாஸ்
அரசியல் மாற்றம் ஏன் கொள்கையிலிருந்து அல்ல, உணர்ச்சியிலிருந்து தொடங்குகிறது..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com