S.I.R | 103 தொகுதிகளில் 10%க்கும் மேலாக வாக்காளர் குறைவு.. என்ன தாக்கத்தை உண்டாக்கும்?
தமிழ்நாட்டில் எஸ்ஐஆருக்கு பின், 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தொகுதிவாரியாக பார்த்தால், 103 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. இதில் மிகவும் உற்றுநோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 26 தொகுதிகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் நீக்கத்தில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பட்டியலில் சென்னை தொகுதிகளே முதல் 9 இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக, ஆயிரம் விளக்கு தொகுதியில் 35.4 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
குறைந்த நீக்கம் என்றால், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 10 சதவீதத்துக்கும் அதிகமான நீக்கம் தேர்தலில் நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த இறுதி பட்டியல் வெளியானதுமே சமூக வலைதளங்களில் பலரும் எனக்கு ஓட்டு இல்லை; என் ஓட்டு போய்விட்டது என்று புலம்புவதைப் பார்க்க முடிந்தது. நிச்சயம் நீக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியேனும் விடுபட்ட வாக்காளர்களாக இருக்கலாம். எனில், இது தாக்கத்தை உண்டாக்கும்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், 122 தொகுதிகளில் 10 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான சதவீத வாக்குகளே வெற்றி தோல்விகளைத் தீர்மானித்துள்ளன. சொல்லப்போனால், 8 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானித்துள்ளன. ஆகையால், நீக்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்களில் தகுதியானோர் இருப்பார் எனில், அவர்கள் யாருடைய ஆதரவாளர்களோ அதற்கேற்ப முடிவுகள் மாறும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்!
