”சிவபெருமானிடம் உறுதிமொழி ஏற்றேன்..” ராஜேந்திர சோழனுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!
உத்தர பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு 2 ஆயிரத்து 184 கோடி ரூபாய் மதிப்பிலான 52 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதோடு, பிரமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கான 20ஆவது தவணைத் தொகையாக 20ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
சிவபெருமானின் பாதங்களில் சமர்ப்பணம்..
தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய அவர், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்திய மகள்களுக்காக, தான் பழிதீர்க்க உறுதிமொழி ஏற்றதாகவும், சிவபெருமானின் ஆசியுடன் அதை தான் செய்து முடித்துவிட்டதாகவும் தெரிவித்தார். அபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை சிவபெருமானின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவிடம் வாலாட்ட நினைத்தால் பாதாள உலகமாக இருந்தாலும், அங்கு சென்று இந்தியா பழிதீர்க்கும் எனக்குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என விமர்சித்துள்ளார்.
ராஜேந்திர சோழனுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர்..
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுரம் சென்றதைக் குறிப்பிட்டு ராஜேந்திர சோழனுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரம் வந்ததை குறிப்பிட்டு பேசிய மோடி, “சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டு பயணத்தின்போது, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு சென்றிருந்தேன். ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த சைவ சமய கோயிலை, சிறந்த மன்னரான ராஜேந்திர சோழனால் கட்டமைத்துள்ளார். வட இந்தியாவில் இருந்து புனித கங்கை நதியை தெற்கிற்கு எடுத்துச்சென்று, இரு பிராந்தியங்களையும் இணைத்தவர் ராஜேந்திர சோழன்” என்று புகழாரம் சூட்டினார்.