“தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன!” - பிரதமர் மோடி பேச்சு

தூத்துக்குடியில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி பேச்சுமுகநூல்

மதுரை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.40 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.

சிறப்பு திட்டங்கள்...

அதில் பேசிய அவர், “இன்று தமிழ்நாடு, தூத்துக்குடியில் வளர்ச்சியின் புது அத்தியாயத்தினை எழுதி கொண்டிருக்கிறது. இங்கு பல திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சியின்போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பல தசாப்தங்களாக கோரிக்கைகளாக இருந்தவற்றை மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது.

இந்த திட்டங்கள் வேண்டுமானால் தூத்துக்குடியில் இருக்கலாம். ஆனால் இந்தியா எங்கும், பல இடங்களில் இவை வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். இந்த தேசம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணித்து கொண்டுள்ளது. இதில் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிக மகத்துவம் வாய்ந்தது.

ஈராண்டுகளுக்கு முன்பாக, நான் கோயம்புத்தூருக்கு வந்தபோது சிதம்பரனார் துறைமுகத்தின் சரக்குகள் கையாளும் திறனை அதிகரிக்கும் பொருட்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தேன். துறைமுகத்தை கப்பல் போக்குவரத்தின் ஒரு பெரிய மையமாக மாற்றியே தீருவேன் என்று வாக்களித்திருந்தேன். தற்போது அந்த உத்தரவாதம் நிறைவேறியுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம், துறைமுகத்திற்கு வெளியேயான சரக்கு கப்பல் முனையத்திற்காக வெகுநாட்களாக காத்திருக்கிறது. இன்று அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த ஒரு திட்டத்தில் மட்டும் 7000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. 9000 கோடி மதிப்பிலான திட்டங்கள் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இத்தோடு இன்று பல்வேறு துறைமுகங்களில் கிட்டதட்ட 2500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளனர்.

கடல் வாணிபத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இந்த புத்துயிர் மற்றும் புதுத்தெம்பு காரணமாக தமிழ்நாட்டின் லட்சக்கணக்கானோருக்கும், இளைஞர்களுக்கும் வேலையை உருவாக்கி தர ஆதாயம் உண்டாகும்.

மேலும் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பாரதத்தின் முதல் மக்கள் பயண படகு தொடங்கப்படவுள்ளது. கங்கையாற்றிலும் இது தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு பெருகக்கூடும். இது காசி வாசிகளுக்கு, என் தொகுதி வாசிகளுக்கு தமிழ்நாடுமக்கள் அளிக்கும் நற்கொடையாகும்.

மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உவர் நீரை குடிநீராக மாற்றும் ஆலை, எரிபொருள் நிரப்பும் வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளது. கடல் வாணிபத் துறையோடு கூட இன்று இங்கே, ரயில் மற்றும் பல வளர்ச்சி திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளனர்.

ரயில் வழிகளின் மின்மயமாக்கலும், இரட்டை வழி ரயில் பாதை போன்ற திட்டங்களும் தென் தமிழகம் மற்றும் கேரளத்திற்கு இடையேயான இணைப்பை மேலும் சிறப்பானதாக மாற்றும். ரூ.4500 கோடி திட்டங்களால் தமிழ்நாட்டின் சாலை வழி தொடர்புகள் மேம்படும். இதனால் பயண நேரம் குறையும்.

பிரதமர் மோடி பேச்சு
“லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது”-ஜெயலலிதா ஆட்சி குறித்து பிரதமர் மோடி அன்றும் இன்றும் பேசியதென்ன?!

வரவிருக்கும் காலங்களில் தேசத்தின் சுற்றுலா மையமும் புத்துயிர் பெரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாடு புதிய சகாப்தத்தை படைக்க உள்ளது.

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 1,300 கி.மீ நீளத்திற்கு ரயில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சாலை மேம்பாட்டிற்க்கு ரூ.1.50 கோடி செலவிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

“தென்னிந்தியாவின் நலனுக்காக பாடுபடுவோம்”

தடைகளை தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபடும். அதேநேரம், மத்திய அரசின் திட்டங்களை குறித்த செய்திகளை வெளியிட விடாமல் தமிழக அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன.

இங்கு கிடைக்கும் அன்பை போல தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களும் என் மீது அன்பை பொழிகின்றனர். நெல்லை மக்களின் அன்பு, நெல்லை அல்வாவை போல இனிமையானது. எனக்கு தமிழ் தெரியாது என்றபோதிலும் தமிழ் மக்களை நேசிக்கிறேன். தென்னிந்தியாவின் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம்.

“தமிழ்நாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறார்கள்”

சுயநலமிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பர். திமுக, காங்கிரஸ் அகற்றப்பட வேண்டிய கட்சிகள். தமிழ்நாட்டில் இருந்து திமுக முற்றிலும் அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறார்கள். வாரிசுகளின் வளர்ச்சிக்காக திமுக உள்ளது; மக்களின் நலனுக்காக நாங்கள் உள்ளோம். திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பதவியில் உள்ளனர். நாங்களோ உங்கள் குடும்பத்திலுள்ள பட்டியலினத்து பிள்ளையை மத்திய அமைச்சராக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் இனி திமுக தேடினாலும் கிடைக்காது” என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com