அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடும் பிரம்மாண்ட நிகழ்ச்சி இன்று (ஜூலை 27) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மோடி திருச்சி சென்றுள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி நண்பகல் 12 மணியளவில் வருகை தர இருக்கிறார். இவரது வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்தில் கங்கைகொண்ட சோழபுரம் தற்போது இருக்கிறது. சோழகங்கம் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் - உச்சகட்ட பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தரிசனம் செய்யவுள்ள பிரதமர், ராஜேந்திர சோழனின் நாணயத்தையும் வெளியிடுகிறார்.
முன்னதாக, மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நேற்றைய தினம் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார். தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி - சட்டை அணிந்து வந்திறங்கிய அவர், விமான நிலையத்தில் 452 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு - சோழபுரம் நான்கு வழிச்சாலை, தூத்துக்குடி துறைமுக சாலையின் ஆறு வழிப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கூடவே, மதுரை - போடிநாயக்கனுார் ரயில் பாதை மின்மயமாக்கல் பணி; கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி இடையே நிறைவடைந்த ரயில்வே இரட்டைப் பாதை ஆகியவற்றையும் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என். ரவி, எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமருக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.