அதிமுகவை அழிக்க சதி: டி.ராஜேந்தர் புகார்

அதிமுகவை அழிக்க சதி: டி.ராஜேந்தர் புகார்
அதிமுகவை அழிக்க சதி: டி.ராஜேந்தர் புகார்

’அதிமுகவை அழிக்க யாரோ குழிதோண்டி வருகிறார்கள். அதற்கு சிலர் துணை போகிறார்கள்’ என்று லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டா பகுதிகள் வறண்டு கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். மீத்தேன் திட்டத்தில் இருந்து அவர்கள் இப்போதுதான் மீண்ட நிலையில், தற்போது அத்திட்டதையே வேறு பெயரில் கொண்டு வருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார். காங்கிரஸ்-திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திட்டம் வேண்டாம் என மக்கள் கூறுகிறார்கள். விவசாய நிலங்களில் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்கான அவசியம் அவர்களுக்கு என்ன?’ என்று கேட்டார்.

காவிரியில் தண்ணீர் தர கர்நாடகா மறுக்கிறது. விவசாய நிலங்களை அழித்துவிட்டால் தண்ணீர் கேட்பார்களா என்பதுதான் அவர்களது சதி திட்டம் என்ற டி.ராஜேந்தர், ’திராவிட கட்சிகள் அழிகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். அப்படியென்றால் பாஜக வளர்ந்து கொண்டா இருக்கிறது?’என்றும் கேள்வி எழுப்பினார்.

பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்தாரா? என்று கேள்வி எழுப்பிய டி.ராஜேந்தர், ‘அன்று மவுன விரதம் இருந்தவர், இன்று ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார்? இந்த மரணத்தில் உள்ள மர்மத்தை போக்க ஏன் மோடி முன்வரவில்லை. ஓபிஎஸ் நீதி விசாரணை கேட்கும்போது கூட, தமிழக பாஜக தலைவர்கள் மவுனம் சாதிக்கிறார்கள் என்றார்.

பின்னர், அதிமுகவை அழிக்க யாரோ குழி தோண்டி வருகிறார்கள். அதற்கு சிலர் துணை போகிறார்கள். அதிமுக தொண்டர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. பன்னீர்செல்வத்திற்கு பின்னால் ஒரு சக்தி இயக்குகிறது. அவருக்கு அதற்கான நிர்ப்பந்தம் உள்ளது. யாருடனோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com