ரயிலை கவிழ்க்க சதி தீட்டிய கும்பல்... அதிர்ஷ்டவசமாக தப்பிய ரயில்!
ஈரோட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ், சங்ககிரி வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயில் நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட நிலையில், இரவு 9:45 மணிக்கு மகுடஞ்சாவடி அருகே காளிகவுண்டம்பாளையம் எனும் இடத்தில் வந்துகொண்டிருந்தது.
மகுடஞ்சாவடியை கடந்து சென்ற போது ரயிலிருந்து தடதடவென சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து ரயிலை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், 10 அடி நீளமுள்ள தண்டவாளத்தின் இரும்புத் துண்டு ஒன்றை ரயிலின் தண்டவாளத்தில் வைத்து ரயிலை கவிழக்க சிலர் சதி தீட்டியுள்ளனர் என்பது அம்பலமானது. நேற்றிரவு 9.45 மணிக்கு, ரயில் அந்த இரும்புத் துண்டின் மீது ஏறிய நிலையில் அதிர்ஷ்டவசமாக நின்றது.
ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் மர்ம நபர்கள் சதி வேலை செய்திருப்பதை புரிந்து கொண்ட ரயில் என்ஜின் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்தில் விரைந்த சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட ஆணையர் சௌரவ்குமார் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பின்னர், என்ஜின் அடியில் சிக்கி இருந்த இரும்பு துண்டை அகற்றினர். தொடர்ந்து, மாற்று என்ஜின் வரவைக்கப்பட்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலோடு இணைத்து அனுப்பி வைத்தனர்.
இதனால், இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இருப்பினும், ரயிலை கவிழ்க்க சதி தீட்டியது யார் என்பது குறித்த தகவல் தற்போதுவரை கிடைக்கவில்லை.
ஏற்கெனவே, அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தநிலையில், தற்போது ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.