பிள்ளையார் ஊர்வலம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் இதோ..!
சென்னையில் பிள்ளையார் சிலைகளை கரைக்கும் பகுதிகளில் இருந்து, சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு எவ்வித வணிக வாகனங்களுக்கும் அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் பிள்ளையார் சிலைகளை கரைக்கும் பகுதிகளில் இருந்து, சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு எவ்வித வணிக வாகனங்களுக்கும் அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சதுர்த்தி வழிபாடுக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள், 4 இடங்களில் வங்கக்கடலில் கரைக்கப்பட உள்ளன.
இதற்காக, மயிலாப்பூர் - ஸ்ரீநிவாசபுரம், திருவான்மியூர் - பல்கலைக்கழகம் நகர், புது வண்ணாரப்பேட்டையில் N 4 மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் - பாப்புலர் எடைமேடை ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கரைப்பதற்காக சிலைகளை ஏற்றி வரும் வாகனங்களுடன் பாதசாரிகளின் கூட்டமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்தை மாற்றம் செய்து காவல் துறை அறிவித்துள்ளது.
அந்த வகையில், திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் அந்த சாலையைத் தவிர்த்துவிட்டு, காந்தி சிலை, ஆர்.கே. சாலை சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி, வி.எம். தெரு, லஸ் சந்திப்பு, அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர். ரங்கா சாலையில் வந்து வலதுபுறம் திரும்பலாம்.
அங்கிருந்து பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி. ராமசாமி சாலையில் இடதுபுறம் திரும்பி, செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு வரை வந்து, ஸ்ரீனிவாசா அவென்யூவில் இடது திருப்பத்தில் ஆர். கே. மடம் சாலை வழியே செல்லலாம். அடையாறிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் தெருவில் இடது புறம் திரும்பி, வி.கே. ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலையில் வந்து வலதுபுறம் திரும்பி, ஆர்.கே. மடம் சாலையின் இடது புறமாக திரும்பலாம்.
அங்கிருந்து தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலையின் இடது புறம் திரும்பி, கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே. சாலை வழியாக செல்லலாம். பிள்ளையார் சிலை ஊர்வலம் ரத்னா கஃபே சந்திப்பைக் கடக்கும் போதெல்லாம், ஜாம் பஜார் காவல் நிலையத்திலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்களுக்கு அனுமதியில்லை.
அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியே செல்லலாம். இதேபோல, பிள்ளையார் சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும்போதெல்லாம், ஐஸ் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்களுக்கு அனுமதியில்லை. அந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு - காமராஜர் சாலை வழியாக திருப்பிவிடப்படும். அல்லது இடதுபுறம் GRH சந்திப்பை நோக்கி செல்லலாம்.
மேலும், பிள்ளையார் சிலையைக் கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே, கலங்கரை விளக்கத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரத்தில் சிலையை கரைக்கும் இடத்திற்கு லூப் சாலை வழியே அனுமதிக்கப்படும். பிள்ளையார் சிலைகளைக் கரைக்கும் இடங்களைச் சுற்றி சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு சென்னை மாநகர காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.