“என்னைப் படிக்கவிடுங்கள்.. கனவைச் சிதைக்காதீர்கள்!” கண்ணீருடன் கதறும் ஆராய்ச்சி மாணவர்!
செய்தியாளர்: ராஜ்குமார்.ர
“தயவுசெய்து என்னைப் படிப்பில் கவனம் செலுத்தவிடுங்கள். மீண்டும் மீண்டும் மன உளைச்சலுக்கும், மனரீதியான தொல்லைகளுக்கும் என்னை ஆளாக்காதீர்கள். எனது கல்வியையும், ஆராய்ச்சியையும் தொடர அமைதியான சூழலை வழங்குங்கள். என்னைப் படிக்கவிடுங்கள்” என மீண்டும் ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வருகிறார் பாரதிதாசன் . கடந்த ஆகஸ்ட் மாதம், தனக்கான கல்வி உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் சட்டப்பேரவை வரையிலும் எதிரொலித்திருந்தது. இந்த நிலையில், சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வன்னியரசு, மாணவர்களுக்கான நிதி வழங்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகும் தனக்கு உரிய நிதி கிடைக்கவில்லை என பாரதிதாசன் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் வீடியோ வெளியிட்ட அவர், “தமிழக அரசிடமிருந்து வர வேண்டிய நிதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் என்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் என்னுடைய ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது என்னால் அங்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு தனது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பயன்படுத்தி தன்னை ஒடுக்க முயற்சிப்பதாகவும், கல்வி உதவித்தொகையை ஆராய்ச்சிக்காகத்தான் பயன்படுத்தினாயா என தன்னிடம் கேள்வி எழுப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். “என்னைப் படிக்க விடுங்கள்.. என்னையும் மற்றொரு ரோஹித் வெமுலாவாக ஆகிவிடாதீர்கள்” என அவர் கண்ணீருடன் உருக்கமாகப் பேசியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் வட்டாரத்திலும் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மாணவருக்கு இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ஏற்கெனவே பல்கலைக்கழகத்திற்கு செலுத்தப்பட்டுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உதவித்தொகைக்கான செலவினப் பட்டியலை அரசு கேட்டிருந்ததாகவும், மாணவர் அளித்த பட்டியல் ஏற்புடையதாக இல்லாததால் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மாணவர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அரசு கூறியுள்ளது. செலவினப் பட்டியலில் சில குளறுபடிகள் இருப்பதாகத் தெரிவித்து, மாணவர் படிக்கும் பல்கலைக்கழகத்தில் அவர் அளித்த உத்தேசப் பட்டியலுக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும், அந்த ஒப்புதல் கிடைத்தவுடன் மீதமுள்ள உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், மாணவர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு அளித்த இந்த விளக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் பார்த்தசாரதி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மீண்டும் மீண்டும் சமூகநீதித் துறையும், அவர்களின் IT Wing-ம் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதுவரை நான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான விளக்கத்தை ஆதாரங்களுடன் கடந்த மாதம் 26-ஆம் தேதியே சமர்ப்பித்துவிட்டேன்” என பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுவதாக அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்தின்கீழ் படித்து வருவதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், அவர்களில் எத்தனை பேர் முதுகலைப் படிப்பும், எத்தனை பேர் ஆராய்ச்சிப் படிப்பும் படித்து வருகின்றனர் என்ற தகவலை துறை வெளியிட வேண்டும் என்றும் பாரதிதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
“முதுகலைப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் ஒன்றல்ல.. இந்தியாவில் JRF உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தும், அதை விட்டுவிட்டு, இதை ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதி வெளிநாட்டுக்கு வந்து படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தன்னை மீண்டும் மீண்டும் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்குவது வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாகவும் பாரதிதாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மாணவர் பாரதிதாசன் மற்றும் சமூகநீதி துறை என இருதரப்பிலும் மாறுபட்ட விளக்கங்கள் வெளியாகி வரும் நிலையில், இதில் உண்மை என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எது உண்மை, எது தவறு என்ற விவகாரம் ஒருபுறம் இருந்தாலும், மாணவரின் கல்வி மற்றும் ஆராய்ச்சி எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்து வருகிறது.
