புதுச்சேரி | தவெக தலைவர் விஜயின் சாலைவலம்.. மீண்டும் புதுச்சேரி முதல்வரை சந்தித்த என். ஆனந்த்.!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜயின் பரப்புரைப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற தவெகவின் சிறப்புப் பொதுக்குழுவில், மீண்டும் தவெக தலைவர் விஜயின் பரப்புரை பயணத்தை தொடங்குவது குறித்தான, முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து, சேலத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள தவெக சார்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில், கார்த்திகை தீபம் காரணமாக உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது எனக்கூறி காவல்துறை தவெக பரப்புரைக்கு அனுமதி மறுத்திருந்தது.
இதையடுத்து, புதுச்சேரியில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. குறிப்பாக, டிசம்பர் 5-ஆம் தேதி புதுச்சேரியில் ஒன்பது இடங்களில் சாலை வளம் மேற்கொள்ளவும், இரண்டு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி புதுச்சேரி மாநில டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஏற்கனவே, கரூரில் நடந்த அசம்பாவித சம்பவங்கள் போன்று விபத்துக்கள் ஏற்படாத வகையில் நகர்வலம் மேற்கொள்வதற்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்ட நிலையில், நகர்வலம் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை எனவும் பொதுக்கூட்டத்திற்கு வேண்டுமானால் அனுமதி தரப்படும் என காவல்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.
இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர், கடந்த ஒரு வாரமாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து விஜயின் நகர் வலத்திற்கு அனுமதி தருவது தொடர்பாக கோரிக்கைகளை விடுத்து வந்தனர். அதேசமயம், நேற்று புதுச்சேரி மாநில டிஐஜி சத்தியசுந்தரம் தவெக பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம். ஆனால், நகர்வலம் மேற்கொள்வதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மீண்டும் நகர்வலம் மேற்கொள்வதற்கான அனுமதி கோரிக்கையை வைத்துள்ளார். ஆனால், முதலமைச்சர் ரங்கசாமியோ காவல்துறையின் பரிந்துரையின் பேரிலேயே முடிவெடுக்க முடியும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கின்றன. மேலும், இந்த சந்திப்பின் போது, புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் உடன் இருந்தார்.
முதலமைச்சருடனான சந்திப்பு முடிந்த பின்னர் வெளியே வந்த ஆனந்திடம் செய்தியாளர்கள் விஜயின் வருகை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், எதற்கும் பதில் அளிக்காமல் தனது வாகனத்தில் ஏறி சென்றார்.

