சிவகாசியில் குவியும் மக்கள்.. புதுப் புது ரகங்கள்.. இறுதிக் கட்டத்தை எட்டிய பட்டாசு விற்பனை!
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே இருக்கும் நிலையில், சிவகாசியில் பட்டாசு விற்பனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் இந்தாண்டு புதிய வரவுகளாக பீட்சா, வாட்டர் மெலன், ஓரியோ பிஸ்கட், கதாயம், வேல், கிட்டார், சிலிண்டர், ஐபிஎல் கிரிக்கெட் அணி இடம் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் பெயர்களில் 30க்கும் மேற்பட்ட பல புதுரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. தீபாவளியில் பட்டாசுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அதனைச் சுற்றியுள்ள சாத்தூர் வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சுமார் 2000-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகளில் இறுதி விற்பனையும் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சீசனக்காக புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கான புதிய ரக பட்டாசுகளான பீட்சா, வாட்டர் மெலன், ஓரியோ பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நினைவுபடுத்தும் வகையில் பட்டாசுகளும், குழந்தைகளுக்காக கதாயம், வேல், கிட்டார், சிலிண்டர் உள்பட 30க்கும் மேற்பட்ட பல புதுரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.
குட்டி ஜப்பான் சிவகாசியில் உள்ளூர், வெளியூர் ஆட்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்களும் முகாமிட்டு பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் தற்போது சிவகாசியில் பட்டாசு விற்பனை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.