தனியார் குடியிருப்பில் ரேபிஸ் பாதித்த தெருநாய்கள்... நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..?

10 மணிக்கு மேல் யாரும் வெளியில் செல்லாதீர்கள் என சொல்கிறார்கள். இத்தனை குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் 10 மணிக்கு மேல் செல்லாதீர்கள் என்று எப்படி சொல்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
apartment
apartmentpt web

ரேபிஸால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமல்ல அதன் உமிழ்நீர் பட்டால் கூட ஆபத்து என்பதும் அதற்கு உயிரையும் பறிக்கும் ஆற்றல் உண்டு என்பதும் யாரும் அறியாததல்ல. அப்படி ரேபிஸால் பாதிக்கப்பட்ட நாயால் மனிதர்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக அதற்கான ஊசியை போட்டுக்கொள்வது நல்லது. அப்படியில்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

இந்நிலையில் போரூர் அய்யப்பந்தாங்கல் பகுதியில் உள்ள ப்ரஸ்டீஜ் பெல்லா விஸ்தா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமானதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை நாய்கள் கடிக்கத் தொடங்கியதாகவும் தகவல்கள் கிடைத்தன. மேலும் மக்களைக் கடித்த நாய்களில் ஒன்றிற்கு ரேபிஸ் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அங்கு வசிக்கும் குடியிருப்புவாசியை தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “போரூர் அய்யப்பந்தாங்கல் பகுதியில் உள்ள ப்ரஸ்டீஜ் பெல்லா விஸ்தா அடுக்குமாடி குடியிருப்பில் கிட்டத்தட்ட 2650 வீடுகள் உள்ளன. 1BHK முதல் 4BHK வரை வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் வாகனங்கள் வந்து செல்ல இரு பாதைகள் உள்ளன. இது ஒரு gated community. இதற்கான பராமரிப்புச் செலவுகள் அனைத்திற்கும் நாங்கள் பணம் செலுத்துகிறோம். ஆனால் வெளி நாய்களை உள்ளே அனுமதித்து விட்டார்கள். இப்போது நாய்களை வெளியில் அனுப்பக்கூடாது என சொல்கிறார்கள். இப்போது அவை உள்ளுக்குள்ளேயே சுற்றுகின்றன.

குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிப்பெண்கள் அனைவரும் வாக்கிங் செல்கிறார்கள். கடந்த 2 நாட்களாக குடியிருப்புப் பகுதியில் இருக்கும் நாய்கள் குடியிருப்புவாசிகளை கடித்திருக்கிறது. 67 வயது முதியவர் ஒருவரை நாய் கடித்துள்ளது. அவருக்கு நீரிழிவு நோய் உள்ளதாக சொல்கிறார்கள். எங்கள் கட்டடத்தின் பக்கத்திலேயே 2 வயது மகனை தூக்கிக் கொண்டு ஒருவர் செல்கிறார், அவரை ஒரு நாய் கடித்தது. பலரையும் கடித்தது ஒரே நாய் தானா என்பது தெரியவில்லை. ஆனால் ஒருவரை கடித்த நாய் பிடிக்கப்பட்டது. அது தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட நிலையில் திடீரென நாய் இறந்துவிட்டது. நேற்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நாய்க்கு ரேபிஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீதமுள்ள நாய்களுக்கும் அது பரவி இருக்கும் அதைக் கண்காணியுங்கள் நாய்களைப் பிடியுங்கள் என சொன்னால் அதை யாரும் கேட்க மறுக்கிறார்கள். ரேபிஸ் இருந்த நாயுடன் மற்ற நாய்கள் இருந்துள்ளன. இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் நாங்கள் எப்படி இருப்பது .

இது குறித்து புகார் அளித்தால், நாய்களுக்கு ரேபிஸ் ஊசி வேண்டுமானால் போடுவோம். அதை இடமாற்றம் செய்ய முடியாது என்கிறார்கள். குழந்தைகள் விளையாடும் பூங்காவில் அத்தனை நாய்கள் உள்ளன. பூங்காக்களில் குழந்தைகள் யாரும் விளையாடவில்லை.

இந்நிலையில் நேற்று குடியிருப்பு வாசிகளுக்கான வாட்ஸாப் குருப்பில், 10 மணிக்கு மேல் யாரும் வெளியில் செல்லாதீர்கள் என மெசேஜ் வருகிறது. இத்தனை குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் 10 மணிக்கு மேல் வெளியே செல்லாதீர்கள் என்று எப்படி சொல்கிறார்கள் என்பதே தெரியவில்லை. gated community பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு கூட பூங்காக்களில் அனுமதி இல்லை. ஆனால், நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் தெருநாய்கள் சுதந்திரமாக திரிகின்றன.

மக்களை நாய் கடித்த பகுதிகளில் சிசிடிவி கேமிராக்களும் உள்ளன. ஆனால் அதற்கான காட்சிகளை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாய்களுக்கான உணவுகளையும் இங்கிருக்கும் சிலர் அளிக்கின்றனர். அவர்களிடம் இது குறித்து கேட்டால், நாங்கள் உணவளிப்பதை நீங்கள் தடுக்க முடியாது என்கின்றனர். 9 வயது குழந்தையைக் கூட நாய் கடித்துள்ளது. அனைத்து தரப்பு வயதினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு செல்பவர்கள் கடந்த சில தினங்களாக அதிகம். மருத்துவமனைகளில் இருப்பவர்களே இது குறித்து கேட்டுள்ளனர்.

இது குறித்து நிர்வாகத்திடம் கேட்ட போது, “நாங்கள் இது குறித்து மேயர் வரை பேசிவிட்டோம். எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இதற்கான கூண்டுகளை ஏற்பாடு செய்கிறோம்” என்கின்றனர். சிலரோ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கூண்டுகளை வைக்கக்கூடாது. நாய்களின் போக்கிலேயே விட வேண்டும் என்கின்றனர். வீடுகளில் உள்ள காம்பவுண்டுக்குள் தெருநாய்களை அனுமதிப்போமா.. அது மாதிரிதானே இதுவும்.

நிர்வாகத்திடம் நாய் கடித்தது குறித்து கூறாமல் சிகிச்சை பெற்று வந்தவர்களும் இருக்கிறார்கள். ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய் குறித்து தெரியவந்தவுடன் நாய் கடித்த அனைவரையும் சோதனை மேற்கொள்ள சொல்கிறார்கள். அவர்களை நிர்வாகம் தொடர்பு கொண்டதா.. அனைவரும் சோதனை மேற்கொண்டதை உறுதி செய்துள்ளதா என்பது தெரியவில்லை” என்கிறார் அச்சத்துடன்.

இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பின் செகரெட்டரி கௌரி சங்கரை தொடர்பு கொண்டோம். தான் வெளியில் இருப்பதாகவும் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் சிவசங்கரி என்பவரது தொடர்பு எண்ணைக் கொடுத்து அவரிடம் இது குறித்து கேட்கச் சொன்னார். அவரைத் தொடர்பு கொண்டபோது, ப்ளூகிராஸில் இருந்து ஆட்கள் வந்திருப்பதாகவும் முதல் கட்டமாக 10 நாய்கள் வரை ஊசிகளை செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com