”நான் சாதி என்னவென்று கேட்கவில்லை..” பட்டிமன்ற ராஜா வீடியோ வெளியிட்டு விளக்கம்!
பட்டிமன்ற ராஜா, அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் உணவு வழங்கியவரின் சாதி குறித்து கேள்வி எழுப்பியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். இதற்கு பதிலளிக்க, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தன் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், சாதி குறித்து கேட்கும் அளவுக்கு சிறிய புத்தி இல்லையெனவும் விளக்கம் அளித்துள்ளார்.
தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ராஜா, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்வின்போது, உணவு கொடுத்த பெண்ணின் சாதி குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில், ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். உணவு கொடுப்பவர்களிடம் சாதியை கேட்கும் அளவுக்கு தனக்கு சிறிய புத்தி இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
பட்டிமன்ற ராஜா மீது குற்றச்சாட்டு..
சமூகவலைதளத்தில் கார்த்திகேயன் என்பவர் பட்டிமன்ற ராஜா அவருடைய தங்கையிடம் சாதி குறித்து கேட்டதாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பில் அட்லாண்டா சென்றுள்ளார். அவருக்கும் அவரது சக பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழ் உணவு தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பு எனது தங்கைக்கு கிடைத்தது. எனது தங்கை தனது சக தோழியர்கள் உடன் மிகச் சிறப்பான வகையில் சமைத்து எடுத்துச் சென்று இருக்கிறார்.
சிறந்த முறையில் அவர்களுக்கு உணவும் பரிமாறி இருக்கிறார்கள். பேச்சாளர் ராஜா இம்மூவரையும் சந்தித்து விசாரித்திருக்கிறார். மூவரிடமும் அவர்கள் ஊரினை விசாரித்திருக்கிறார். ஊர் பெயர் சொன்னவுடன் நீங்கள் இந்த சாதியா என்று கேட்டு இருக்கிறார். எனது தங்கை முறை வரும்போதும் நீங்க எந்த ஊருமா என்று கேட்டு இருக்கிறார்.
ஐயா நான் காரைக்குடி என்று சொல்லி இருக்கிறார். ஓ நீங்க செட்டியாரா என்று கேட்டிருக்கிறார். எனது தங்கை அமைதியாக இருக்கவும் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நீங்கள் வேற என்ன ஆளுங்க என்றும் கேட்டிருக்கிறார். தங்கை எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் தான் அடுத்தவர்களிடம் கேட்டிருக்கிறார். என் தங்கை இதைக் கூறும்போது அழுகையுடன் கூறினாள். சாப்பாடு நல்லா இல்லை என்று சொல்லி இருந்தால் கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். அங்கு யாருக்குமே நான் என்ன சாதி என்று தெரியாது யாரும் என்னிடம் கேட்டதும் இல்லை. திடீரென்று அப்படி கேட்கவும் ஒரு மாதிரியா ஆயிடுச்சு. வாந்தி வருவது போல் உணர்ந்தேன். அழுகையும் ஆத்திரமும் அடக்கிக் கொண்டு நிற்பது ரொம்பவும் சிரமமாக இருந்தது என்றாள்.
தமிழ்நாட்டில் ஒருவர் சாதி பெயரை கேட்பது அசிங்கமான செயல் என்று படிக்காத பாமரனுக்கும் தெரியும். அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாலும் நேரடியாக கேட்க மாட்டான். படித்தவர், பட்டிமன்ற பேச்சாளர், எண்ணற்ற மேடைகளில் பேசியிருக்கிறீர்கள், ஒவ்வொரு தீபாவளி அன்று சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் உங்களது பேச்சை ரசித்து கேட்டவர்களில் நானும் ஒருவன். என் தங்கையும் அப்படியே அதனால் தான். உங்களுக்காக விழுந்து விழுந்து சமைத்து எடுத்து கொண்டு சென்று இருக்கிறார்.
இந்த சாதி மத இன சனியன்களை விட்டு தள்ளி வாழ்வோம் என்று தான் என் தங்கை போன்றவர்கள் படித்து திறமை வளர்த்துக்கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் செட்டில் ஆகிறார்கள். அங்கேயும் உங்களது ஈன புத்தியை கொண்டு வந்து காட்டுவீர்களா?!
ஊர் பெயரைக் கேட்டு சாதியை கண்டு கொள்ளும் மட்டமான புத்தி போகவில்லை. காரைக்குடி என்றால் செட்டியார் மட்டும்தான் இருக்கிறார்களா ? வேறு மனிதர்கள் இல்லையா ? அந்தக் கேள்விக்கு அமைதியாக இருந்த பின்னும் விடாமல் நீங்கள் வேறு என்ன ஆள் என்று கொக்கி பட வேண்டிய அவசியம் என்ன? அப்படி சாதி அரிப்பு கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சாதி மக்களிடம் மட்டும் பட்டிமன்ற பேச்சை நடத்துங்களேன். அமெரிக்காவில் சாதிகளை மறந்து தமிழர்களாய் இணைந்து ஒரு சங்கம் வைத்து அந்த சங்கத்திற்கு பேச கூப்பிட்டால் அங்கேயும் வந்து உங்களது சாதி வன்மத்தை தான் காட்டுவீர்களா?!” என பதிவிட்டிருந்தார்.
மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட பட்டிமன்ற ராஜா..
கார்த்திகேயன் என்பவரின் பதிவு வைரலான நிலையில், பட்டிமன்றம் ராஜா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்தசூழலில் வீடியோ வெளியிட்டிருக்கும் பட்டிமன்றம் ராஜா, தன் மீதான குற்றச்சாட்டு மறுப்பு தெரிவித்து, அவ்வளவு சிறிய புத்தி தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
வீடியோவில் பேசியிருக்கும் அவர், “அமெரிக்காவுல அட்லாண்டா மாநகரத்துல நாங்க ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம், அப்படி வரும்போது பல தமிழ் சொந்தங்கள் வீடுகளில் சமையல் பண்ணி எங்களுக்கு சாப்பாடு தருவாங்க. அப்போது சிலரின் சாப்பாடு நம்ம ஊரை விட சுவையாக இருக்கும், அப்போது அவங்களோடு ஊரு பெயரையும் சொல்லுவாங்க. சார் நான் உங்க ஊரு சார், நான் திருச்சி, நான் வாடிப்பட்டினு நிறைய சொல்லுவாங்க. அதுபோல தான் ஒருத்தவங்க காரைக்குடினு சொன்னாங்க, அப்போது நான் அவங்களிடம் செட்டிநாடா என்று தான் கேட்ட நியாபகம் இருக்கிறது, செட்டியார் என்று கேட்கவில்லை. இவ்வளவு சுவையா செட்டிநாடு உணவு இருக்கே என்று தான் கேட்ட நியாபகம் இருக்கு. அவங்க யாரு என்ன? என்ன சாதி? என்றெல்லாம் யோசிக்கிற அளவு எனக்கு சின்ன புத்தி இல்ல.
நான் இவ்வளவு நாட்கள் தமிழ் சொந்தங்களை சந்தித்திருக்கிறேன், யாராவது நான் சாதி சமய உணர்வோடு இருந்தேன்னு சொல்லுங்க. என்னை அறிந்தவர்களுக்கும், என்னோடு பயணிக்கிறவர்களுக்கும் என்னை நன்றாக தெரியும், நான் தமிழர் சாதி ஒன்றைத்தான் பெருமையாக கருதுகிறேன்.
நாங்கள் பங்கேற்று பேசிய நிகழ்ச்சியில் கூட இங்கு தமிழ் சங்கங்கள் நிறைய இருக்கு, நீங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து இருங்க, ஒருத்தர் நிகழ்ச்சிக்கு மற்றவங்க போய் ஒன்னா இருங்க என்றெல்லாம் நான் பேசியிருக்கிறேன். அந்த நிகழ்வு பிப்ரவரி 3ஆம் தேதி நடந்தது, ஆனால் தற்போது அவ்வளவு நாட்களுக்கு பிறகு இந்த தகவல் பரப்பப்படுகிறது.
நான் பேசியது தவறாக இருந்திருந்தால் அப்போதே அந்த சகோதரி என்னிடம் கேட்டிருக்கலாம், அல்லது பட்டிமன்ற நிகழ்ச்சியின் போது கூட கேட்டிருக்கலாம், எல்லோரும் சந்தோஷமாக தான் இருந்தார்கள்.
அவ்வளவு தூரம் நாங்கள் செல்லும்போது நீண்ட தூரம் பயணம் செய்து எங்களுக்கு உணவு கொண்டுவந்து குடுப்பவர்களை நான் உறவினர்களாக தான் பார்க்கிறேன். நான் சாதி என்னவென்றெல்லாம் கேட்கவில்லை, அது மிகவும் தவறான பதிவு, நான் தற்போது மிகுந்த மன வலியோடு பேசுகிறேன். எந்த காலத்திலும் நான் அப்படி இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை” என்று பேசியுள்ளார்.

