Exclusive | “கனவில் கூட எதிர்பார்க்கலை” - பத்மஸ்ரீ விருது அறிவிப்பு குறித்து வேலு ஆசான் நெகிழ்ச்சி!
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி மத்திய அரசால் அறிவிக்கப்படும். அவை, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு தற்போது பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் மதுரையை சேர்ந்த பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலு ஆசான் பேட்டி:
இதுகுறித்து நம்மோடு பேசிய வேலு ஆசான், “மதுரை அலங்காநல்லூரை சேந்தவன் நான். முழு பெயர், வேல்முருகன். 1981 முதல் பறை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் நான். தொடக்கத்தில் சில ஆண்டுகளில் அதை விட்டு விலகியிருந்தேன். அதன்பின் 1995-க்குப் பின் பல இடையூறுகளை கடந்து மீண்டும் பறையை மீண்டும் கையில் எடுத்தேன். அப்போது மதுரை மேலவாசலில் முருகன் வாத்தியாரிடம் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முறையாக பயிற்சி பெற்றேன். அவரிடம்தான் புதிய அடிகளையும் புதிய ஆட்டத்தையும் கற்றேன். என் சாமி என்றே அவரை சொல்வேன்.
தொடர்ந்து நான் பல வடிவங்களை பறையில் உருவாக்கி, இப்போது தமிழ்நாடு முழுக்க பயிற்சி கொடுத்து வருகிறேன். திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி பள்ளி, கல்லூரிகளிலும் பயிற்சி கொடுத்து வருகிறேன். பல கலைஞர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளேன். பத்மஸ்ரீ விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கனவில் கூட நான் இதை எதிர்பார்க்கவில்லை. கலைமாமணி விருதுக்குக்கூட விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இந்த விருது கிடைத்திருப்பது, மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாட்டுப்புற கலைஞர்கள், மரபுக்கலைஞர்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன். அதேபோல என் குருநாதர் சேவுகன் ஐயாவுக்கு இதை சமர்ப்பிக்கிறேன். அவர் குச்சியை உயர்த்திவிட்டால், எனக்கு அடையாளமில்லை. மேலும் என் குருநாதர்கள் கட்டபாசு, மலைச்சாமி, என் ஐயா (அப்பா) ராமய்யா, முருகன் சாமி எல்லோருக்கும் நன்றி சொல்ல நினைக்கிறேன். அவர்களெல்லாம் இப்போது இல்லை. அதுதான் மன வருத்தமாக உள்ளது.
இந்த விருதை வழங்கியவர்களுக்கும், ஏற்பாடு செய்தவர்களுக்கும், உலகத்தமிழர்களுக்கும், மரபுக்கலையை கையிலெடுத்து காப்பாற்றிவரும் அனைத்து கலை சொந்தங்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.