பத்ம விருதுகள் அறிவிப்பு | மதுரை பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது!
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி மத்திய அரசால் அறிவிக்கப்படும். அவை, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு தற்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மதுரை பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த இவர், ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் பறை இசையை கற்றுக் கொடுக்கிறார். பாரம்பரிய பறை இசை கலை வடிவத்தை தரப்படுத்தவும், புத்துயிர் பெறவும், அதை உலக அளவில் கொண்டு செல்லும் பெரும்பாலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் கலை வடிவமாக இருந்தாலும், பெண் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, பெண்களை மேம்படுத்துகிறார்.
வேலு ஆசானின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல விருதுகள் அவரை அலங்கரித்துள்ளன. அய்யா அழகர்சாமி விருது, சிறந்த மக்கள் கலைஞன் விருது, ஞானப்பறை, பறையிசை சிற்பி, கிராமிய கலைச்சுடர், தந்தை பெரியார் விருது, பாவலர் ஓம் முத்துமாரி விருது என்று பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவரின் மாணவர்கள் பலர் இன்று உலகெங்கும் பரவியிருக்கின்றனர். ஆசானின் எண்ணத்தை அவர்கள் செயலாக்கி வருகின்றனர்.