பாமகவை இழுக்க முயற்சிக்கும் NDA: கறார் காட்டும் ராமதாஸ்; அன்புமணி வைக்கும் கோரிக்கை; என்ன நடக்கிறது?
அதிமுக கூட்டணியில் பாமகவைக் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார். பாஜக தலைவர் பாண்டா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 2026 தேர்தலில் வெற்றி பெற 25 தொகுதிகள் வேண்டும் என்று அன்புமணி கேட்டுள்ளார். பாஜக, பாமக இடையே இணைப்பு உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணிக்குள் ராமதாஸ் – அன்புமணி இருவரையும் எப்படியும் கொண்டுவர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விரும்புவதாகவும், இதற்கான முன்முயற்சியாகவே பாஜக தலைவர் பாண்டா – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையிலான சந்திப்பு நடந்ததாகவும் தெரிய வந்திருக்கிறது. மேலும், அதிமுக - பாஜக கூட்டணியில் கரம் கோர்க்க, 25 தொகுதிகள் வேண்டும் என்று அன்புமணி கேட்டதாகவும் தெரிகிறது.
2026 தேர்தலில் வெற்றியை ருசிக்க, அதிமுகவும் பாஜகவும் ஏற்கனவே கைகோர்த்துவிட்டன. இன்னும் பல கட்சிகள் இணையும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரம்மாண்டமான ஒரு கட்சி இணைய உள்ளதாக அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமியும் ஏற்கனவே கூறினார்கள். இதனூடாக 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் இருந்த கட்சிகளை சிதறாமல் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவரும் பணியை முதலில் முடிக்க அதிமுக விரும்புகிறது.
அதிமுகவின் கூட்டணியில் பாமகவைக் கொண்டுவருவதை எடப்பாடி பழனிசாமி முக்கியமான விஷயமாகக் கருதுகிறார். காரணம், அதிமுக தன்னுடைய கோட்டையாகக் கருதும் மேற்கு மண்டலத்தில் அதன் வெற்றிக்கு பாமகவின் ஓட்டு வங்கி அவசியம். ஆனால், பாமகவுக்குள் தந்தை மகன் இடையே நடந்துவரும் மோதல், பாமகவின் எதிர்காலத்தை மட்டும் அல்லாது கூட்டணிக் கட்சிகளையும் கவலையில் தள்ளியுள்ளன. இத்தகு சூழலில்தான் ராமதாஸ் – அன்புமணி இடையே பிணைப்பை உண்டாக்கவும், பாமகவை சிதறாமல் கூட்டணிக்குள் கொண்டுவரவுமான முயற்சிகளில் பாஜக இறங்கியுள்ளது. இந்த பின்னணியிலேயே பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக களம் இறங்கியுள்ள பாண்டா சமீபத்தில் ராமதாஸையும் அன்புமணியையும் சந்தித்துள்ளார்.
இணைவு தொடர்பாக இசைவான வார்த்தைகள் ராமதாஸிடமிருந்து கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது; அதேபோல, 2021 தேர்தலைக் காட்டிலும் கூடுதல் இடங்கள் இம்முறை வேண்டும்; 25 தொகுதிகளுடன் மாநிலங்களவை இடம் ஒன்றும் வேண்டும் என்று அன்புமணி கேட்டதாகக் கூறப்படுகிறது. டெல்லியுடன் ஆலோசனை கலந்து வருவதாகக் கூறி பாண்டா புறப்பட்ட நிலையில், பண்டா மீண்டும் விரைவில் தமிழகம் வருவார் என்றும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இணைப்பு குறித்து பேசப்படும் என்றும் டிசம்பருக்குள் இணைப்பு உறுதிசெய்யப்படும் என்று டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.