பழனி | பங்குனி உத்திர திருவிழா - திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி வழிபடுகின்றனர்.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆறாம் நாள் திருவிழாவான நேற்று மாலை நடைபெற்றது. திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி - வள்ளி, தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் நான்கு கிரி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற உள்ளது.