“இரட்டை இலையை முடக்குங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் புதிய சின்னம் கேட்ட ஓபிஎஸ்!

இரட்டை இலையை முடக்குங்கள் என்றும் அவ்வாறு முடக்கினால் தனக்கு பக்கெட் சின்னம் ஒதுக்கவேண்டும் எனவும் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்pt web

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் பரபரப்புடனே இயங்கி வருகிறது. சில கட்சிகளுக்கு சின்னம் பிரச்சனையாக உள்ளது. பாஜக உடனான கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் உடனடியாக ஒதுக்கப்படுகிறது என்றும் கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் கேட்கும் சின்னத்தை ஒதுக்குவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சிக்கல் அதிமுகவிற்கும் இருக்கிறது. கட்சி குறித்து தொடரப்பட்ட வழக்குகளில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான சூழல் வந்த போதும், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகளே வந்துள்ளது. இருந்தபோதும், சின்னம் உட்பட அதிமுக விவகாரங்கள் தொடர்பாக, அளிக்கப்பட்ட மனுவை தேர்தல் ஆணையம் விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுகவினரோ தங்களது தரப்பு வாதங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனாலும், இரட்டை இலை சின்னத்திற்கு எப்போது பிரச்சனை வருமோ என அதிமுக தலைவர்கள் பதட்டத்துடனே உள்ளார்கள். ஏனெனில், இரட்டை இலைச் சின்னத்தை எப்படியாவது பெற்றே தீருவோம் என்பதில் ஓபிஎஸ் உறுதியுடன் உள்ளார். சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூட, “இரட்டை இலை சின்னத்திற்காக சட்டப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறேன். தொண்டர்களின் பலத்தை நிரூபிக்கும் வகையிலேதான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில், போட்டியிடுகிறேன்” என தெரிவித்திருந்தார்.

அதேபோல், அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனும் அதிமுக தீயவர்களிடம் சென்றுவிட்டதாக தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு பெரும் பலமாக பார்க்கப்படும் சூழலில் இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள் என தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு கொடுத்துள்ளார். மனுவில், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மக்கவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது, அவரது வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தை உபயோகிக்க தடை விதிக்க வேண்டும்.

தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் அல்லது இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். அவ்வாறு இரட்டை இலை சின்னம் முடக்கும் பட்சத்தில் தனக்கு “பக்கெட்" சின்னம் வழங்க வேண்டும்” என இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com