முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொலை வழக்கு தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது” என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் ‘நீங்கள் முந்தைய ஆட்சியில் துணை முதலமைச்சர் ஆக இருந்தீர்கள். அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், “நானும் 4 வருடம் துணை முதலமைச்சராக இருந்தேன். துணை முதலமைச்சருக்கு அரசில் எவ்வித அதிகாரமும் இல்லை. நான் வகித்த துறையில் மட்டும் தான் எனக்கு அதிகாரம் இருந்தது. சட்டம் ஒழுங்கு காவல்துறை போன்றவற்றில் எந்த அதிகாரமும் எனக்கு இல்லை. முழுமையான பொறுப்பு தமிழ்நாட்டில் முதலமைச்சராக யாரெல்லாம் இருந்தார்களோ அவர்களுக்குத் தான் உண்டு. அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த போது வலியுறுத்த வேண்டியவர்களை வலியுறுத்தினோம். எனக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை.
அதிமுக, இரட்டை இலை விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்ததும் மேல் நடவடிக்கை தொடரும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், கோடநாடு வழக்கை தீவிர புலன் விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என வாக்குறுதி தந்துள்ளார் முதல்வர். அவரது ஆட்சி அமைந்து 2 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால் சிறு அளவில் கூட முன்னேற்றம் இல்லையே. அரசின் பணியை துரிதப்படுத்தத்தான் இந்த ஆர்ப்பாட்டம்” என்றார்.
வருகிற 18-ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “பாஜக தலைமையிலான தேசிய கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு வரவில்லை” என பதில் அளித்தார்.
மேலும், கொங்கு மண்டல மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். தேனி தொகுதி எம்பி ஓ.பி.ரவீந்திரன் தகுதி நீக்க தீர்ப்பு குறித்த கேள்விக்கு, “நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பதில் அளித்தார். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையம் பொதுச்செயலாளராக ஒப்புக்கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.