சட்டப்பேரவை நேரலை நிறுத்தம்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து, இரண்டாவது நாளான இன்று காவிரியில் அணைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் தனித் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தவெக, திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட பெரும்பான்மை கட்சி ஆதரவுடன் நிறைவேறியிருக்கிறது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தேர்தல் பரப்புரையின்போது, எதிர்க்கட்சிகள் பேசும்போது திமுக நேரலை நிறுத்திவிடுவதாகவும், தவெக ஆட்சியின் போது சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதும் ஒளிபரப்பப்படும் என முதல்வர் விஜய் அப்போது தெரிவித்திருந்தார். இந்தசூழலில் தான், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை ஒளிபரப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் தான், சட்டப்பேரவை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இதுகுறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. முழு நேரலை.. முழு நேரலை... அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவ நேரலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது அவ்ளோ பயமா? முதல்வரே என கேள்வி எழுப்பபட்டுள்ளது.
தேமுதிக பொதுசெயலாளர் பிரமலதா விஜயகாந்த் பேசுகையில், மக்கள் வரிப்பணத்தில் தான் சட்டப்பேரவை நடக்கிறது. எனவே, மக்கள் நேரலையில் பார்ப்பதில் என்ன தவறு என விஜயகாந்த் கேட்டார். இப்போது, நேரலையில் சட்டப்பேரவையில் வரவில்லை என தற்போது குற்றச்சாட்டு வந்திருக்கிறது இதை அவைத் தலைவரின் கவனத்துற்கு நான் கொண்டு செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
