மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு.. அனைத்துக் கட்சிகளும் ஆதரவு.. நிறைவேறியது முதல்வரின் தீர்மானம்!
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தபிறகு நடைபெறும் முதல் முழுமையான சட்டப்பேரவை கூட்டத்தொடர், நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 2-வது நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மற்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட மறைந்த மூத்த தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் விஜய, கர்நாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பை மதிக்காமலும், மத்திய அரசின் எவ்வித அனுமதியும் பெறாமலும், கர்நாடக அரசின் இத்தகைய செயலுக்கு இப்பேரவை எதிர்ப்பு தெரிவிக்கிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிரான முதல்வரின் தீர்மானம் குறித்து, சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்துப் பேசிய, காங்கிரஸ், மனித நேய மக்கள் மக்கள் கட்சி, விசிக, சிபிஐ, சிபிஎம், மனிதநேய ஜனநாயகக் கட்சி, தேமுதிக, பாமக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்ததைத் தொடர்ந்து, முதல்வரின் இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியிருக்கிறது.
அதேபோல, இத்தீர்மானம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி நதிநீர் தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை முறியடிக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் திமுக துணை நிற்கும் எனப்பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, தனித் தீர்மானத்திற்கு ஆதரவளித்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் விஜய், தனி நடுவர் மன்றம் அமைக்க ஏற்கனவே சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார்.
இவ்வாறு, கர்நாடக அரசின் மேகதாது அணைக் கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியிருக்கிறது.

