“தேர்தலை மையப்படுத்தியே சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளது” - எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

தேர்தலை மையப்படுத்தியே சிஏஏ சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
சிஏஏ  சட்டம்
சிஏஏ சட்டம் முகநூல்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று (மார்ச் 11) அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இச்சட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில், "2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கான விதிகளை அரசு அறிவிக்க நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன.

இச்சட்டத்துக்கான விதிகளை அறிவிக்க எடுக்கப்பட்ட நேரம், பிரதமரின் அப்பட்டமான பொய்களுக்கு மற்றொரு நிரூபணம்" என விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில், "மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம். மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது. அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்

இதேபோல தேர்தலை மையப்படுத்தியே இந்த நேரத்தில் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சிஏஏ  சட்டம்
CAA | குடியுரிமை திருத்தச் சட்டம் | எதிர்ப்பு கிளம்பியது ஏன்? சட்டம் சொல்வது என்ன?

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இதுபோன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் அவர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, கடந்த ஜனவரி 31-ம் தேதியே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை பட்ஜெட் உரையின்போது, சபாநாயகர் தமிழ்நாடு பேரவையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படியக மாநில அரசு உறுதியளித்தும், த.வெ.க. தலைவர் விஜய் “தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோமென்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்” என நேற்று கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமன்றி சட்டத்தை கொண்டு வந்தது மத்திய பாஜக அரசாக இருக்கும்போது, மாநில அரசை சட்டத்தை கொண்டுவர விடமாட்டோம் என கூறசொல்லி நிர்ப்பந்திப்பது எந்தவகையில் சரி என்று அவர்மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.

சிஏஏ தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட பதிவில் , “இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம்.

2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்!” என்று கூறியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com