குடியுரிமை திருத்தச் சட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம்கோப்புப்படம்

CAA | குடியுரிமை திருத்தச் சட்டம் | எதிர்ப்பு கிளம்பியது ஏன்? சட்டம் சொல்வது என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று அமலாகி இருக்கும் நிலையில், அந்தச் சட்டம் சொல்வது என்ன, அதை ஏன் எதிர்க்கின்றனர், மத்திய அரசின் விளக்கம் என்ன என்பதை பற்றியெல்லாம் விரிவாக பார்க்கலாம்.

செய்தியாளர்: விக்ரம் ரவிசங்கர்

குடியுரிமையின் முக்கியத்துவம்:

பொதுவாக ஒரு நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்வதன் மூலமாக கிடைக்கும் உரிமைகளென பார்த்தால், ‘அந்த நாட்டுக்குள் எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாக குடியேறலாம் - தகுதியை வளர்த்துக்கொண்டு அந்த நாட்டின் அரசு வேலையில சேரலாம் - எந்நேரம் வேண்டுமென்றாலும் நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சமின்றி நிம்மதியாக வாழலாம்’ ஆகியவைதான். இவை எல்லாவற்றுக்கும் மேல், வாக்குரிமை மூலமாக, அந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை அந்நபர் முடிவு செய்யலாம்.

சிஏஏ (குடியுரிமைத் திருத்தச் சட்டம்) சட்டம் சொல்வது என்ன?

இப்படிப்பட்ட குடியுரிமையை பிறப்பின் மூலமாக, வம்சாவளியாக இருப்பதன் மூலமாக, பதிவு செய்யுறது மூலமாக என்று மட்டுமில்லாமல், குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசே, அந்த நாட்டின் குடியுரிமை பெறும் வழிகளை தளர்த்துவது மூலமாகவும் பெறலாம். அப்படிப்பட்ட ஒரு தளர்வு வழிதான் குடியுரிமைத் திருத்தச் சட்டம்¸ 2019.

2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளைச் சேர்ந்த மதச் சிறுபான்மையினருக்கு (உதாரணத்துக்கு, குறிப்பிட்ட ஒரு நாட்டில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்தால், அங்குள்ள முஸ்லீம்கள் அல்லாதவர்கள் சிறுபான்மையினராக கருதப்பட்டு, அவர்களுக்கு இச்சட்டம் உதவும்) இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம்
அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்; சொன்னபடி நிறைவேற்றியது மத்திய அரசு! சட்டம் சொல்வதுஎன்ன?

இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர் மற்றும் கிறிஸ்தவர்கள், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்’ என்பதுதான் இந்த திருத்தம்.

இந்திய அரசின் சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைக்கு ஆளாவதில் இருந்து, அவர்களை இந்த சட்டம் பாதுகாக்கும். திருத்தம் கொண்டுவரும் முன்வரை, இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-ன் படி குடியுரிமை பெற விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் இந்தியாவில் 11 ஆண்டுகள் தங்கியிருந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதன்மூலம்,

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, குடியுரிமை பெற மதத்தை ஒரு காரணியாக்கி இருக்கிற சட்டமாக அமைந்துள்ளது, குடியுரிமை திருத்தச் சட்டம்…

நாடு முழுக்க போராட்டங்கள் நடப்பதற்கும், இதுவே ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

எதிர்ப்பிற்கான பிற காரணங்கள்...

1) ‘மதத்தின் பெயரால் பாகுபாடு’

‘மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது, எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும்’ என இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. அப்படியிருக்கையில் இந்த திருத்தம் மதரீதியிலான பாகுபாட்டுக்கு சட்ட அங்கீகாரம் தருகிறது - என்பது இச்சட்டத்தை எதிர்க்கிறவங்க வாதமாக உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்
'பட்டியலில் முஸ்லிம்கள் எங்கே?' - சிஏஏ-வை அமல்படுத்தும் அரசும், அரசியல் சலசலப்புகளும்!

2) ‘கலாசாராம், வாழ்வாதரம் கேள்விக்குறியாகும்’

சரி… மத ரீதியான பாகுபாடு மட்டும்தான் எதிர்ப்புக்கு காரணமா என கேட்டால் இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலுமே, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தது.

காரணம், இந்த சட்டத்திருத்தத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு குடியேறிகள் அதிகளவில் இந்தியாவுக்கு வந்தால், தங்களுடைய கலாசாரமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படுமோ என்று வடகிழக்கு மாநில மக்கள் கவலை கொள்கின்றனர்.

3) தமிழகத்தில் எதிர்ப்பு ஏன்?

பட்டியலில் இடம்பெறாத சிறுபான்மையினர், இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் போன்றோர் இந்த சட்டத் திருத்தத்தின் மூலமாக இந்தியக் குடியுரிமை பெற வழிவகை செய்யப்படவில்லை. இதனால்தான் தமிழகத்திலும் எதிர்ப்பு கிளம்பினத்துக்கு காரணம்.

குடியுரிமை திருத்தச் சட்டம்
“தமிழ்நாட்டில் CAA கால்வைக்க விடமாட்டோம்” - முதலமைச்சர் உறுதி

அதே சமயம், “இலங்கைத் தமிழர்களை இந்தப் பட்டியலில் சேர்த்தால் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் தமிழர்கள், நாடு திரும்பி இலங்கையில் தங்களுக்கான உரிமைகள் பெற முடியாம போயிடலாம். அவங்க மத ரீதியில அல்லாம, இன ரீதியாதா துன்புறுத்தலுக்கு உள்ளாகினர்” என இந்தச்சட்டத்தை ஆதரிப்போர் தெரிவிக்கின்றனர்.

4) ‘அகமதியா மக்களுக்கும் சிஏஏ-வில் இடமில்லை?’

இதேபோல, பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சொல்லப்படும் அகமதியா இன மக்களும், இந்த சட்டத் திருத்தம் மூலமா இந்தியக் குடியுரிமை பெற வழிவகை செய்யப்படவில்லை.

நபிகள் நாயகமே கடைசி இறைத்தூதர் என நம்பும் பாரம்பரிய இஸ்லாமியர்கள், இன்னொருவரையும் இறைத்தூதராக ஏற்றுக்கொண்ட அகமதியா மக்களை இஸ்லாமியர்களாக கருதுவதில்லை. இதனால் அவர்களுக்கான மத அங்கீகாரம் பாகிஸ்தானில் தொடர்ந்து மறுக்கப்படுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்க அவர்கள் இந்தியாவுக்கு வந்தாலும் இந்தச் சட்டம் அவர்களுக்கு உதவாது. காரணம், அகமதியா மக்கள் அண்டை நாடுகளில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இதனால் அவர்களை இந்த சட்டத் திருத்தத்தில் சேர்த்துக்கவில்லை என இந்திய அரசு கூறியுள்ளது.

இந்திய அரசு கூறுவது என்ன?

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு தரப்பில் சொல்லப்படும் பதில்:

“மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானதத் தவிர, வேறு காரணங்களுக்காக இந்திய குடியுரிமை பெற விரும்புவோர் (உதாரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் முஸ்லிம்களாக இருப்போர்) வழக்கமான நடைமுறைகள பின்பற்றி, அதாவது 11 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்து விண்ணப்பிப்பதன் மூலமாக குடியுரிமை பெறலாம்” - இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com