SIR | 'ஆன்லைன் மூலமாக...' புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கும் தேர்தல் ஆணையம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிரமாக நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் கணக்கீட்டு படிவத்தை நிரப்ப புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழைந்து, தேவையான விவரங்களை நிரப்பி, OTP மூலம் உறுதிப்படுத்தலாம். பிப்ரவரி 7-ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை வரை வாக்காளர்கள் இல்லங்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் நடவடிக்கை நடைபெறும். டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை ஆட்சேபனைகள் மற்றும் உரிமைகோரல்களை தெரிவிக்கலாம்.
பின்னர், ஜனவரி 31ஆம் தேதி வரை வாக்காளர்களின் குறைகளை கேட்கும் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுடைய விண்ணப்பங்களை சரி பார்க்கும் நடவடிக்கைகள் நடைபெறும். இறுதியாக பிப்ரவரி 7-ம் தேதி அன்று சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து தெரிவிக்கபட்டிருக்கிறது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் கணக்கீட்டு படிவத்தை நிரப்புவதற்கான வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதாவது, வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://voters.eci.gov.in) கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) ஆன்லைன் மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் (online) உள் நுழையலாம். அதற்கு பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் "Fill Enumeration Form" என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.
இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
எப்படி படிவத்தை நிரப்புவது..?
வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.
தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும். மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..

