“அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது” – உரிமையாளர்கள் அறிவிப்பு; அமைச்சர் பேச்சுவார்த்தை
கேரளாவில் சாலை வரி செலுத்தாததால் 30 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் முறையாக சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதாக கூறி 30 ஆம்னி பேருந்துகளுக்கு மொத்தமாக 70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதன் காரணமாக நவம்பர் 8ஆம் தேதியன்று காலை கோவை மாவட்டம் வாளையார் சோதனை சாவடி அருகே கேரளாவிற்கு செல்லாமல் 10க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து இரு மாநில காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என வாய்மொழி உத்தரவாதம் அளித்ததை அடுத்து பேருந்துகள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு கேரளா சென்றன.
அதேபோல் குமரி வழியாக கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள் எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தப்பட்டது. திருவனந்தபுரம் செல்லும் பயணிகளை சில நிர்வாகங்கள் மாற்று வாகனங்களை ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தன. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரிவிதிப்போம் என மற்ற அண்டை மாநிலங்களும் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியானது.
இதன் காரணமாக அண்டை மாநிலங்களில் ஆம்னி பஸ்களுக்கு வசூலிக்கப்படும் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பேருந்து நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்று மாலை முதல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்றும் பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசி தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கங்களின் தலைவர்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் தமிழ்நாட்டை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைப்பிடிக்கப்பட்டு ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த 7 நாட்களாக கர்நாடக போக்குவரத்து துறையும் தமிழக பதிவெண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை தடுத்து ஒவ்வொரு பஸ்சுக்கும் ரூ.2.20 லட்சம் வரை அபராதம் விதித்து மொத்தம் ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் 2021-ல் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட “ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்'டின்படி தமிழ்நாட்டில் இன்று (நேற்று) வரை அண்டை மாநில பஸ்களுக்கு சாலைவரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம்' என தெரிவிக்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக ஆபரேட்டர்கள் இரட்டை வரியும், அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம். இந்த நிகழ்வை தொடர்ந்து 7-ந் தேதி இரவு 8 மணி முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறோம்.
இன்று நவம்பர் 10-ந் தேதி மாலை முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் இடையே ஆம்னி பேருந்துகளை இயக்குவதை நிறுத்துகிறோம். இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு சுமூக தீர்வை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.

