சட்டப்பேரவை: ஓபிஎஸ் இருக்கை மாற்றம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி அறிவித்தார். இதனை அடுத்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இதற்கு தனது எதிர்ப்பினை கடுமையாக பதிவு செய்த வண்ணம் இருந்தார். இருப்பினும் இதுதொடர்பாக நடந்த அனைத்து சட்டப்போராட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வந்ததால் அவர்களது வாதத்திற்கு வலு கூடிய வண்ணமே இருந்தது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபால் இருக்கை அருகே அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் ஏற்கெனவே தேர்வாகி இருந்த நிலையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். சபாநாயகர் இந்த மனுமீதான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என முதல்வர் நேற்று பேரவையில் பேசி இருந்த நிலையில் தற்போது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோம் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ்பாண்டியன் இருக்கையும் மாற்றப்பட்டு ஆர்.பி. உதயகுமார் அமர்ந்திருந்த வரிசையில் ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் செந்தில்பாலாஜியின் இருக்கையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

