
கொரோனா பேரிடர் பெருந்தொற்று காலத்தில் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்டு, பின் கடந்த 31.12.2022 அன்று பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை உயர்நீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் பணி அமர்த்தாமல் உள்ளது தமிழக அரசு.
இதனை கண்டித்து மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் கோவிட் செவிலியர் சங்கத்தின் துணை தலைவர் உதயகுமார் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் 300 மருத்துவர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில், 3000 செவிலியர்கள் தற்காலிக செவிலியர் பணியில் இருந்து நிரந்தர செவிலியர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் 300 தற்காலிக மருத்துவர்களும் நிரந்தர மருத்துவர்களாக பணிமாற்றம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 3290 தற்காலிக செவிலியர்களுக்கு, அப்போது காலிப்பணியிடம் சுமார் 3,300 இருப்பதால் நிரந்தர தன்மையுடைய செவிலியராக மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசிடம் எங்கள் சங்கம் சார்பாக 04.10.2021 அன்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசு தரப்பில் இந்த கோரிக்கையை ஏற்று 2022 மார்ச் 8 ஆம் தேதி கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதற்கான அரசு கோப்புகளில் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்தது. ஆனால் கடந்த 31.12.2022 ஆம் ஆண்டு இரவில் எவ்வித முன்னறிவிப்புமின்றி எங்களை தமிழக அரசு பணிநீக்கம் செய்தது. எங்களுக்கு அரசு அளித்த வாக்குறுதியை மீறியும், தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 356-க்கு எதிராகவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை ரத்துசெய்யக் கோரி பல்வேறு கட்ட போராட்டத்தை சங்கம் சார்பாக முன்னெடுத்ததன் விளைவாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது. ஆனால் அவையும் தோல்வியில் முடிந்தது. அதே சமயம் அரசு தரப்பில் மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அத்தகைய பணி ஏதும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் எங்களுக்கு ஏற்பட்ட இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இவ்வழக்கில் கடந்த 12.07.2023 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட கோவிட் செவிலியர்கள் உரிய தேர்வு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்று கூறி வழக்கு தொடுத்த செவிலியர்களுக்கு 6 வாரத்தில் பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக அரசு உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மூன்று முறை சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசினோம். ஆனால், அவர் எதற்கும் முறையாக பதிலளிக்கவில்லை.
இதனால் வருகின்ற 11ம் தேதி தமிழக முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம். குறிப்பாக சென்னை தலைமைச் செயலகத்துக்கு முன்பாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றார்.