தஞ்சை| புற்றுநோய் பிரிவில் நோயாளிகளை நிற்கவைத்து ட்ரிப்ஸ்.. செவிலியர் அலட்சியம்!
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் நோயாளிகளுக்கு நிற்கவைத்து ட்ரிப்ஸ் ஏற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செவிலியர் மரியாதையற்ற முறையில் நோயாளிகளை நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் கட்டிடங்கள் இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதில் புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு படுக்கைக்கு சென்று டிரிப்ஸ் ஏற்றாமல், நோயாளிகளை செவிலியர் அறைக்கு வரச்சொல்லி நிற்க வைத்தவாறு ட்ரிப்ஸ்கள் ஏற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த செவிலியர் நோயாளிகளை அவ மரியாதையோடு நடத்தும் காட்சியும் வெளியாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இது குறித்து மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவர் செல்வத்திடம் கேட்டபோது, செவிலியர் மருத்துவமனையில் நிலையான செவிலியர் கிடையாது, அவர் ஒரு திட்ட பணியாளர், அவரிடமும் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விரிவான விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

