தீமைக்கு மாற்று மற்றொரு தீமையா? பேய்க்கு மாற்று பிசாசா? திமுக-அதிமுகவை விமர்சித்த சீமான்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக-அதிமுக இடையே ஆட்சி மாற்றம் என்பது உண்மையான மாற்றமா அல்லது தீமைக்கு மாற்று மற்றொரு தீமையா என கேள்வி எழுப்பினார். அவர், ஆட்சியில் ஊழல், கொலை, கொள்ளை போன்றவை தொடருமா அல்லது மாற்றம் ஏற்படுமா என சிந்திக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், தாம்பரம் சேலையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 234 கொள்கை பரப்புச் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை நிர்வாகிகள் என மொத்தம் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் கொள்கை பரப்பு செயலாளர் பணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை நிர்வாகிகளின் பணி குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஆட்சி மாற்றம் என்றால் திமுக-அதிமுகவிற்கு இடையில் மாற்றிக்கொள்வதா என கேள்வி எழுப்பினார்.
ஆட்சி மாற்றம் என்றால் என்ன..?
செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மாற்றம் என்றால் என்ன? வரக்கூடிய ஆட்சி மாற்றத்தில் ஊழல் இருக்குமா? இருக்காதா? கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடைபெறாதா? சாராயக்கடைகள் மூடப்படுமா? நிலத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுமா? பாதுகாக்கப்படுமா? கல்வியின் தரம் உயரந்திடுமா? தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனை மாற்றப்படுமா? பசி இல்லாமல் மக்கள் உறங்க சென்று விடுவார்களா? ஆட்சி மாற்றத்தில் என்ன நிகழ்ந்து விடும் புதிய ஆட்சியில் என்ன நிகழும்?
திமுக ஆட்சியில் பெண்களுக்கு மட்டும் இலவச பஸ் பாஸ், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவச பஸ் பாஸ். மொத்தமாக பஸ்சை சும்மா விட்டுவிட்டு பேருந்து மற்றும் நடத்துனர்களுக்கு சம்பளம் எங்களுடைய சொத்தில் என்று எடுத்துக் கொடுப்பீர்களா?
கடந்த முறை எடப்பாடி இருந்தார் இந்த முறை ஸ்டாலின் இருக்கிறார், மீண்டும் எடப்பாடியை உட்கார வைப்பீர்கள்? இதனால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது. ஆட்சி முறையில் தான் மாற்றம் வேண்டும்” என பேசினார்.
மேலும், திமுக அதிமுக இடையே எந்த இடத்தில் மாறுபட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு திமுக ஆட்சியில் 10 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். நாளை அதிமுக ஆட்சி அமைத்தால் இங்கிருந்தவர்கள் பலர் அங்கு இருப்பார்கள். *திமுக ஒரு சொர்ணாக்கா*, *அதிமுக ஒரு வர்ணாக்கா* தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்பார்கள். தாய் கொடுமைக்காரி என்னும் போது அந்த குழந்தை மட்டும் கோகிலவாணியாகவா? இருக்கும்.
நாங்கள் ஆட்சி மாற்றம் கொண்டு வரப் போகிறோம், இந்த ஆட்சியை தூக்கி எறிந்து விடுவோம் என்கிறார்கள். யாரை வைத்து எங்கு தூக்கி எறிய போகிறார்கள். தீமைக்கு மாற்று எப்படி ஒரு தீமையாக இருக்கும்? நெருப்புக்கு மாற்று நெருப்பா நெருப்பை தண்ணீர் ஊற்றி தான் அணைக்க வேண்டும். திமுகவுக்கு மாற்று எப்படி அதிமுக இருக்க முடியும்? பேயை விரட்டி விட்டு பிசாசை உட்கார வைக்க போகிறீர்கள். மீண்டும் பிசாசை விரட்டி விட்டு மறுபடியும் பேயை உட்கார வைப்பீர்கள்” என விமர்சித்து பேசினார்.

