மகனை கடத்தியதாக.. ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ பெயரில் நாம் தமிழர் பெண் நிர்வாகியை ஏமாற்ற முயன்ற கும்பல்!
நடிகர் விஜய தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி உள்ள "கிங்டம்" திரைப்படத்திற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக படத்தை தடை செய்ய வேண்டும் என கூறி நாம் தமிழர் கட்சியினர் சென்னையில் பல்வேறு திரையங்குகளில் போராட்டம் நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஐநாக்ஸ் தியேட்டரை முற்றுகையிடப்போவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிளோரி ஆனி தலைமையில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அவர் போராட்டத்திற்கு கிளம்பிய போது அவரது கணவருக்கு ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பல் கால் செய்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போராட்டம் முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், போராட்டத்திற்கு கிளம்பிய போது தனது கணவரின் மொபைலுக்கு காவல்துறை அதிகாரியின் புகைப்படத்தோடு வாட்ஸப் கால் ஒன்று வந்ததாகவும், எதிர்முனையில் பேசிய நபர் தான் சிபிஐ அதிகாரி எனவும், தங்களுடைய மகனை கைது செய்து விட்டதாகவும் கூறி மிரட்டியதாக தெரிவித்தார்.
போராட்டத்திற்கு செல்வதால் அதனை தடுப்பதற்காக போலீசார் இதுபோல செய்கிறார்களா? என ஆரம்பத்தில் சந்தேகம் இருந்ததாகவும் பிறகு தனது சட்டக் கல்லூரி மாணவரான மகனுக்கு கால் செய்த போது தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வந்து தன்னை தொடர்பு கொண்டதாகவும் அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஸ்டாலினிடம் தனது மகன் கடத்தப்பட்டதாக வந்த கால் குறித்து கூறியதாகவும் தெரிவித்தார்.
போராட்டத்திற்கு வந்த போலீசாரிடம் போனை கொடுத்து விவரத்தை சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மகனை கைது செய்துள்ளதாக கூறி மிரட்டியதாகவும், மகனுடைய வாய்ஸ் போலவே ஒரு வாய்ஸை போட்டு காண்பித்து பயமுறுத்தியதாகவும், தான் நாம் தமிழர் கட்சியில் இருப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிகழ்வதாக தான் முதலில் நினைத்ததாகவும் தெரிவித்தார். பிறகுதான் அவர்கள் சைபர் கும்பல் என்பது தெரிந்ததாகவும் மேலும் ரூபாய் 50 ஆயிரம் பணம் கேட்டும் மிரட்டியதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி குளோரி ஆனி தெரிவித்துள்ளார்.