கோவை | ”ஆடம்பரமாக எதையும் கேட்கவில்லை” - மின்சார வசதி வேண்டி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்!
கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மயிலம்பாறை பகுதியில், தீர்வை ஏற்படாத தரிசு நிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு அமைவிடச் சான்று இல்லை என்ற காரணத்தை முன்வைத்து, மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்க மறுத்து வருகிறது. இந்த நிலையில், மின்சாரம் இல்லாததால் இப்பகுதியில், மாலை நேரத்திற்கு பிறகு குழந்தைகள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர் எனவும், குழந்தைகளின் கல்வி எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், தங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலையடுத்து, போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு சட்ட மன்ற உறுப்பினர் தாமோதரன் வந்தார். அப்போது, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், விரைவில் மின்சார வசதி செய்து தரப்படும் எனக் கூறினார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாங்கள் ஆடம்பரம் எதையும் கேட்கவில்லை. அடிப்படை தேவையான மின்சாரம் தான் கேட்கிறோம். எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் இருளில் தள்ளப்படுகிறது. அதிகாரிகள் 10 நாட்களில் மின்சாரம் வழங்குவதாக கூறியுள்ளனர். அதுவும் நடக்காவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும்” என தெரிவித்துள்ளனர்.
அரசு விதிகளில் தளர்வு ஏற்படுத்தி, ஏழை–எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும், குழந்தைகளின் கல்வியையும் கருத்தில் கொண்டு, மயிலம்பாறை பகுதிக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
