
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி ஊராட்சி சமத்துவபுரம் சுப்புராயன் கொட்டாய் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த முதியவர் பூசாரி பெருமாள் என்பவர் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக, சித்தார் ஓடைப்பள்ளம் வழியாக 10 அடி ஆழமுள்ள தண்ணீரில் உடலை தூக்கி சென்று மறு கரையில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர்.
இந்நிலையில், மாற்றுப் பாதையில் மயானத்திற்கு செல்ல வேண்டுமென்றால் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கும். இவ்வாறு மழைக் காலங்களில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் இது போன்று உயிரிழந்தவர்களின் உடலை ஆபத்தான நிலையில் கொண்டு செல்லும் உறவினர்கள் அடக்கம் செய்து வருகின்றனர் .இது போன்று இனி தொடராமல் இருக்க அரசு விரைந்து அப்பகுதி மக்களுக்கு புதிதாக தரைப்பாலம் அல்லது உயர்மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.