எதிர்ப்புகளை மீறி கையகப்படுத்தப்படும் நிலங்கள்.. அரசு அதிகாரிகள், என்.எல்.சி. நிர்வாகம் சொல்வதென்ன?

2006ல் இருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலான இழப்பீடு அனைத்தும் கொடுத்தாயிற்று. அதுபோக கூடுதலாகவும் இழப்பீடு தொகை கொடுக்க என்.எல்.சி தயாராக உள்ளது - என்.எல்.சி. நில எடுப்புக்கான செயல் இயக்குநர் ஜாஸ்பர் ரோஸ்
nlc
nlcpt web

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கோ. ஆதனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.

மறுபுறம் விவசாயிகள் 2000 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்திய அனைத்து நிலங்களுக்கும் சமமான இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .

மேலும், வாழ்வாதாரப் பணமாக வழங்கப்படும் 3 லட்சத்தை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நிரந்தர வேலையும், சமமான இழப்பீடும் வழங்காவிட்டால் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ஒரு பிடி மண்ணைக் கூட தரமாட்டோம் என்றும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

ஆனாலும் கூட இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கம் பணிக்காக பரவனாறை இடம் மாற்றி புதிய பரவனாறு வெட்டும் பணியை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் தங்களது கோரிக்கையை ஏற்காமல் பரவனாறு வெட்ட அனுமதிக்க மாட்டோம் என போராடிவரும் சூழலில் என்எல்சி நிறுவனம் மற்றும் நில எடுப்பு துறையினர், மாவட்ட வருவாய் துறை மற்றும் காவல்துறை ஆகியோரை ஒருங்கிணைத்து திடீரென 30 ராட்சச மண் வெட்டும் இயந்திரத்தை வைத்து அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய விளைநிலத்தில் பயிர்களை அழித்து பரவனாறு வெட்டும் பணியை மேற்கொண்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுவட்டார அனைத்து கிராம பகுதிகளிலும் தடுப்பு அமைத்து கிராம மக்கள் கையகப்படுத்தும் இடத்துக்கு வராமல் காவல்துறையினர் பல தடுப்புகளை அமைத்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் மட்டும் அவசரம் அவசரமாக சிறிய கால அவகாசத்தில் நெல் அறுவடை வாகனம் மூலம் அறுவடை செய்யும் பணியை செய்து வருகின்றனர். காலையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பரவனாறு வெட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது.

என்.எல்.சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி கும்பகோணம் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல் விசியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இன்று காலை மேல் வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி வாய்க்கால் வெட்டும் பணியை மேற்கொண்டது அதற்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. என்.எல்.சி. விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க நடத்தப்பட்ட கல்வீச்சா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் விருத்தாசலத்தில் என்எல்சி நிலம் எடுப்பதை கண்டித்தும் பாமகவினரை கைது செய்ததை கண்டித்தும். பொதுமக்கள் விரோத போக்கில் செயல்படும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடந்தது. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த விருதாச்சலம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.

இது குறித்தும் அரசு உயரதிகாரிகளும் விளக்கமளித்தனர். டி.ஐ.ஜி ஷியாவுல் ஹக் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “என்.எல்.சி. யின் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்த முடிவுசெய்து அதற்கான இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனாலும் கையகப்படுத்தப்படாமல் இருந்தது. அதில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். வேலைக்காக தற்போது தேவைப்படுவதால் பயிர்களுக்கு இழப்பீடு கொடுத்து கையகப்படுத்துகிறார்கள். மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்பட்டு்ள்ளனர். முன்னெச்சரிக்கைக்காக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம மக்களின் குறைகளை கேட்டு அறியப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளால் மகிழ்ச்சியாக தான் உள்ளனர்” என்றார்.

அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று வருவார்கள் நிலம் கையகப்படுத்துவார்கள்.. என்பதெல்லாம் முன்னாலேயே திட்டமிடப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த டி.ஐ.ஜி ஷியாவுல் ஹக், “அனைத்தும் திட்டமிடப்பட்டது தான். முக்கியமான இடங்களில் கண்காணிப்பிற்கு காவலர்கள் உள்ளனர். இது தாண்டி யாராவது வந்தார்கள் என்றால் பேசி புரிய வைப்போம். பணியை தடுக்க யாராவது வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவார்கள்“ என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தர்மராஜ் கூறுகையில், “இந்த நிலத்திற்காக 2006 முதல் 2013 வரை நிலம் எடுப்புக்கான தொகை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட நில உரிமையாளர்கள் அப்பகுதியில் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தனர். முன்னாள் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் அந்த இடத்தில் பயிர் செய்ய வேண்டாம் என கடந்த டிசம்பர் மாதம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே என்எல்சி மூலம் உற்பத்தியாகும் 800 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் முதல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாக எடுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பரவனாறு பணிக்காக 30 ஹக்டர் நிலத்தில் 11.5 கிலோமீட்டர் ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதம் 1.5 கிலோமீட்டர் இடம் மட்டுமே எடுக்க வேண்டி உள்ளது.

1.5 கிலோமீட்டர் தூர தொலைவில் உள்ள 74 விவசாயிகளுக்கு ஏற்கெனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு உயரிய இழப்பீடும் வாங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இழப்பீடு பெற்றுள்ளனர் அவர்களுக்கும் தற்போது உயரிய இழப்பீடு வழங்கப்பட உள்ளது. கடந்த ஒன்றரை மாத காலத்தில் அப்பகுதி விவசாயிகளிடம் பத்திற்கு மேற்பட்ட முறை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே அந்த பகுதியில் விவசாயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதையும் மீறி தற்போது அப்பகுதியில் விவசாயம் செய்துள்ளனர். மேலும் ஒவ்வொரு கிராமத்திலிருந்து இரண்டு விவசாயிகள் பங்கேற்புடன் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது அந்த கமிட்டிக்கும் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

266 ஹெக்டருக்கு கருணைத்தொகை உயர்த்தி வழங்க வழங்குவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக பல விவசாயிகள் நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்துள்ளனர். தற்போது அப்பகுதியில் உள்ள பயிர் சேதப்படுத்தப்பட்டால் அதற்கான இழப்பீடும் ஒரு வார காலத்திற்குள் வழங்கப்படும். மேலும் அதிகமான கருணைத்தொகை வழங்குவதற்காக சிறப்பு முகாம்களும் அப்பகுதியில் நடத்தப்படும் என தெரிவித்தார். இதற்காக NLC, DRO தலைமையில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாம் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக வந்து உடனடியாக உயரிய கருணை இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம். தற்பொழுது பரவனாறு கால்வாய் பணி நடைபெறும் பகுதி ஏற்கெனவே உரிய இழப்பீடு வழங்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு என்எல்சியால் கையகப்படுத்தப்பட்ட பகுதி. மேலும் அதற்கு கூடுதலாகவும் இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. 50 சதவீதத்திற்கும் மேல் விவசாயிகளுக்கு உயரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாதிக்கப்படும் பகுதிகளுக்கும் ஒரு வார காலத்திற்குள் உரிய இழப்பீடு வழங்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து என்.எல்.சி. நில எடுப்புக்கான செயல் இயக்குநர் ஜாஸ்பர் ரோஸ் புதிய தலைமுறையிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், “2006ல் இருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலான இழப்பீடு அனைத்தும் கொடுத்தாயிற்று. அதுபோக கூடுதலாகவும் இழப்பீடு தொகை கொடுக்க என்.எல்.சி தயாராக உள்ளது. விவசாயிகளுக்கும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். விவசாயிகள் வந்து பெற்றுக் கொள்ளலாம். இன்று சேதமான பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையையும் வழங்குவதற்கு என்.எல்.சி தயாரக உள்ளது. விளைந்த நிலங்களில் அறுவடை செய்த பின்பே அந்த இடத்தை கையகப்படுத்தப் போகிறோம். 2006 ஆம் ஆண்டில் இருந்து 2013க்குள் நடந்திருக்க வேண்டியது. பல்வேறு காரணங்களால் நடக்காமல் உள்ளது. இப்போதுதான் அப்பணிகள் நடந்து வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com