நீலகிரி: தொடர் மழை எதிரொலி – மண் சரிவு அச்சம்... மலை ரயில் சேவை ரத்து
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னுரில் 15 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கீழ்கோத்தகிரியில் நட்டக்கல் செல்லும் சாலை துண்டாகியது. இதனால் பழங்குடி மக்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்கோத்தகிரியில் 24 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் கோத்தகிரி வழியாக வாகனங்கள் செல்ல நீலகிரி ஆட்சியர் அருணா தடை விதித்துள்ளார். இந்த சாலையில் பயணிக்க வேண்டாம் என காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். இதே போன்று குன்னூர், பர்லியார் பகுதியில் கனமழை பெய்ததில் உமரி காட்டேஜ், பழைய மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து வீடுகள் சேதமடைந்தன. உமரி காட்டேஜ் பகுதியில் கான்கிரீட் சாலை உடைந்து சேதமடைந்தது.
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவை சரி செய்து 6 மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்தை சீர் செய்தனர். கனமழை முன்னெச்சரிக்கை விடுக்கபட்டதால் உதகை, குன்னூர் இடையேயான மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண், பாறை மற்றும் மரங்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளன. இதனால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரயில்வே துறையினர் தண்டவாளங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.