அடுத்தடுத்து உருவாகும் 2 புயல்கள்.. செப். 20 வரை கனமழை எச்சரிக்கை!
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்துக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அதேநேரத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 18ஆம் தேதி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19ஆம் தேதி திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், செப்டம்பர் 20ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்திலேயே தொடங்கிவிடும் என்றும் ஜனவரி வரையில் நீடிக்கும் என்றும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்த 2 புயல்கள் உருவாகும் என்றும் வழக்கத்தைவிட நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை அதிகமாக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.