தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை..!
Weather Update |தமிழகத்தில் புதுக்கோட்டை, பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. புதுக்கோட்டையில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. அங்கு 3 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்ததால், சாலையில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்தது. பெரியார் நகர், போஸ் நகர், கம்பன் நகர் பகுதிகளுக்கும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். குடியிருப்புகளில் புகுந்த நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.
5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்
இதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவதானப்பட்டி, வடுகப்பட்டி, லட்சுமிபுரத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இந்நிலையில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கு ரெட் அலர்ட் ?
அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
வரும் 5ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.