வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வனிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. இதன்காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும். வரும் நாட்களில் இது புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், ஆங்காங்கே மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்தம் தமிழகம் நோக்கி நகரும்போது பருவமழை மீண்டும் வேகமெடுக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஆந்திராவை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் 28ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. 26ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால், வரும் 28ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

