வந்துட்டேன்னு சொல்லு.. IRS-க்கு Goodbye.. தவெகவில் இணையும் புது முகம்.. வெளியான அறிக்கை
ஐஆர்எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அருண்ராஜ், சமீபத்தில் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றிருந்தார். அவரது கடிதத்தை குடியரசுத் தலைவர் அலுவலகம் ஏற்றுக்கொண்ட நிலையில், புது அறிக்கை வெளியிட்டுள்ளார் அருண்ராஜ். அதோடு, விஜய்யை சந்தித்து தவெகவில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது அறிக்கையில் இருப்பது என்ன? என்ன பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கடைசி படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துள்ளார். ஜூன் முதல் வாரத்தில் இருந்து கள அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதனை குறிக்கும் வகையிலேயே, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதற்கட்டமாக வரும் 30ம் தேதி விருத வழங்க இருக்கிறார் விஜய். மாணவர்களுக்கு மூன்றாவது ஆண்டாக விருது வழங்குவதோடு, பூத் கமிட்டி கூட்டம்.. மக்கள் சந்திப்பு.. சுற்றுப்பயணம் என்று அடுத்தடுத்த திட்டங்கள் கைவைசம் இருப்பதாக கூறுகின்றனர் தவெக நிர்வாகிகள்.
ஏற்கனவே, விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்த நிலையில், பேச்சாளர் ராஜ்மோகனும் கட்சியில் இணைந்து கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். இன்னும் பலர் விஜய் கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ், நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் உள்ளிட்டோரும் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதில், மருது அழகுராஜ் விஜய்யை வரவேற்று பல இடங்களில் பேசி இருக்கிறார்.
இந்த நிலையில்தான், விஜய் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு ஆலோசனை வழங்கி வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கேற்றபடி, விருப்ப ஓய்வு கேட்டு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார் அருண்ராஜ். குடியரசுத் தலைவர் அலுவலகமும் அருண்ராஜின் கடிதத்தை ஏற்று, அவரை பணியில் இருந்து விடுவித்தது. இந்த நிலையில்தான், தனது பணிகள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டதாக, A New Beginning என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அருண்ராஜ்.
எக்ஸ் தளத்தில் வெளியான அவரது அறிக்கையில் ”எனது பணிகள் அனைத்தையும் ஒப்படைத்திருக்கிறேன். மருத்துவராக, ஐஆர்எஸ் அதிகாரியாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் உழைத்திருக்கிறேன். உணர்ச்சிப்பூர்வமான தருணமாக இருக்கிறது. என்னுடன் பணியாற்றி ஊக்கப்படுத்திய சகாக்கள், சீனியர்களுக்கு நன்றி. முழுமையான நிறைவோடு ஐஆர்எஸ் பணியில் இருந்து விலகுகிறேன். miles to go before i sleep" என்று குறிப்பிட்டுள்ளார். பணியை ஒப்படைத்துவிட்டதால், விரைவில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைய இருப்பதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
ஏற்கனவே ஆலோசகர் குழுவில் முக்கிய முகமாக இருந்த இவருக்கு, கட்சியில் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ஜூன் முதல் வாரத்தில் இந்த இணைப்பு நிகழும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அருண்ராஜின் அறிக்கையைத் தொடர்ந்து, தவெக தங்களை வரவேற்கிறது என்று விஜய் ஆதரவாளர்கள் பலரும் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.