\
New Alliance Under TVK Vijay Leadership updates
CM VIJAY ANI

தவெக தலைமையில் புதிய கூட்டணி.. நாளை பெயர்சூட்டு விழா? தேசியமா.. மாநிலமா?

தவெக தலைமையில் புதிய கூட்டணி அமையுமா? , அதன் பெயர், பங்கேற்கும் கட்சிகள் மற்றும் தேர்தல் வியூகம் குறித்து நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

செய்தியாளர் - ஆனந்தன்

தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையவுள்ள கூட்டணிக்கு நாளை புதிய பெயர் சூட்டப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இதில் கூட்டணியின் பெயர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

TVK Alliance
TVK AllianceANI

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் காலங்களில் கூட்டணிகள் அமைப்பது என்பது அரசியலின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எழுவது வழக்கம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ அமைக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருந்தன. மறுபுறம், அதிமுக தலைமையில் ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற பெயரில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.

dmk
dmkPTI

இந்தச் சூழலில், தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி அரசியலை நோக்கி நகர்ந்துள்ளது. தனித்துத் தேர்தலைச் சந்தித்து ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், தற்போது கூட்டணி அமைத்து அதற்குப் பெயர் சூட்டும் நடவடிக்கையில் அக்கட்சி ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேசியக் கூட்டணியா.. மாநிலக் கூட்டணியா?

தவெக தலைமையில் உருவாகும் கூட்டணியின் பெயர் எப்படி இருக்கும் என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, கூட்டணிக்கு தேசிய அளவிலான பெயர் சூட்டப்படுமா அல்லது தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ற மாநில அளவிலான பெயர் சூட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

cm vijay, rahul gandhi
cm vijay, rahul gandhiPTI

தவெக நிர்வாகிகள் சிலர் அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், கூட்டணியின் பெயரும் தேசிய அரசியலை பிரதிபலிக்கும் வகையில் அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, தேசிய அளவிலான பெயர் சூட்டப்பட்டால், அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சில கம்யூனிஸ்ட் கட்சிகள், கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கூட்டணி அமைப்பில் பங்கேற்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ள நிலையில், தவெக தலைமையிலான கூட்டணியின் அரசியல் வடிவம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

PTI

இதனால், நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கின்றன, அவற்றின் நிலைப்பாடு என்ன, கூட்டணியின் பெயர் என்ன என்பன தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நாளைய கூட்டத்தில் என்ன முடிவு?

தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையவுள்ள கூட்டணிக்கு பெயர் சூட்டப்படுவது மட்டுமின்றி, கூட்டணியின் எதிர்கால அரசியல் பயணம், அதில் இடம்பெறும் கட்சிகள் மற்றும் தேர்தல் வியூகம் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி என இரு முக்கிய அரசியல் அணிகள் செயல்பட்டு வரும் நிலையில், தவெக தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி எத்தகைய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்கு சூட்டப்பட உள்ள பெயர் மாநில அரசியலை மையப்படுத்தியதாக இருக்குமா அல்லது தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டதாக இருக்குமா என்பதற்கு நாளைய கூட்டத்துக்குப் பிறகு விடை கிடைக்கலாம்.

விஜய்
விஜய்ANI

இதனால், தமிழக அரசியலில் தவெக தலைமையில் உருவாகும் புதிய கூட்டணியின் பெயர், அதில் இடம்பெறும் கட்சிகள் மற்றும் அதன் அரசியல் இலக்கு ஆகியவை தொடர்பான அறிவிப்பை அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com