\
Nepal flash floods: How a saree turned into a lifeline
Nepal floodReuters

நேபாள வெள்ளத்தில் தமிழர்கள் உயிர் தப்பிய 'திக்திக்' கதை.. மரண வெள்ளத்தில் கைகொடுத்த சேலை!!

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பதுபோல், நேபாள பெருவெள்ளத்தில் ஒருவர் அணிந்திருந்த உடையே 21 பேரின் உயிரைக் காக்கும் சாதனமாக மாறியுள்ளது. நேபாள வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் உயிர் தப்பிய, நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தைப் பற்றி பார்க்கலாம்.
Published on

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தின் ராசுவா பகுதிக்கு பயணம் மேற்கொண்ட 21 தமிழக பக்தர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 3 பேருந்துகளில் 57 பேர் பயணித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்தவர்கள்.

சியாப்ருபேசி பகுதியில் இருந்து சீன குடியேற்றச் சோதனைச் சாவடி நோக்கி சென்றபோது, சேற்றில் சிக்கிய பேருந்து சிறிது நேரம் நின்றது. அப்போது திடீரென வெடிகுண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதுடன், பாறைகளும் சேறும் பேருந்தை நோக்கி புரண்டு வந்தன. அணை திறந்துவிட்டதைப் போல் வெள்ளநீர் பாய்ந்ததாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர்.

Nepal flood
Nepal floodReuters

நேபாள ஓட்டுநர் உடனடியாக ஆபத்தை உணர்ந்து, பேருந்தில் இருந்து வெளியேறி மேடான பகுதிக்கு ஓடுமாறு பயணிகளிடம் கூறினார். ஆனால், சேறும் சகதியும் நிறைந்த செங்குத்தான சரிவில் ஏறுவது கடினமாக இருந்தது.

ஆண்கள் சிலர் மேலே சென்ற நிலையில், பெண்கள் பலர் வழுக்கி மீண்டும் கீழே விழுந்தனர். அப்போது மேலே சென்றிருந்த பூங்கொடி என்ற பக்தர் தன்னிடம் இருந்த ஸ்வெட்டரை அணிந்துகொண்டு தனது சேலையை அவிழ்த்து கீழே இருந்தவர்களுக்கு வீசியுள்ளார். அங்கிருந்த கேபிளுடன் சேர்த்து சேலையைப் பிடித்துக்கொண்டு பலர் மேலே ஏறினர். ஏற முடியாமல் தவித்த ஒரு பெண்ணின் இடுப்பில் சேலையை கட்டி, மேலிருந்தவர்கள் அவரை இழுத்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், வெள்ளம் வாகனத்தைச் சுற்றி பாய்ந்ததால் அவர்கள் உயிர் தப்பியதாக பக்தர்கள் தெரிவித்தனர். 'வாகனம் சில அடி இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் சென்றிருந்தாலும் நாங்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்போம்' என அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிவரஞ்சனி என்பவர் கூறினார்.

Nepal flood
Nepal floodReuters

பின்னர் ஆயுதப்படை முகாமில் தஞ்சமடைந்த அவர்கள், அங்கிருந்து மலைப்பாதையில் சுமார் மூன்று மணி நேரம் நடந்து சென்று ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் காத்மாண்டு, டெல்லி வழியாக அவர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.

57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், 36 பேரை தொடர்புகொள்ள முடியாத நிலை நீடித்தது. தமிழகத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் நேபாளம் சென்றிருந்த நிலையில், சுமார் 90 பேர் இன்னும் தொடர்பில் இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருப்பது பதற்றத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.

Nepal flash floods: How a saree turned into a lifeline
உறைந்து போய் நின்ற பெண்.. ராணுவ வீரர்கள் செய்த செயல்.. கண்ணீர் வரவைத்த தருணம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com