நெல்லை | தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு – கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்
செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா
நெல்லை அருகே நடுக்கல்லூர், பழவூர் உள்ளிட்ட 6 இடங்களில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் புற்றுநோய் மண்டல மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மற்றும் சில தனியார் மருத்துவமனையின் கழிவுகளை லாரிகள் மூலமாக கொண்டு வந்து இங்கு கொட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மூன்று நாட்களுக்குள் மருத்துவக் கழிவுகள் அனைத்தையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கேரளா அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து வந்திருந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, இது அபாயகரமான கழிவுகள் இல்லை என அறிக்கை சமர்ப்பித்தனர். இந்நிலையில், பசுமைத் தீர்ப்பாயம் விடுத்துள்ள கெடு இன்று முடிவுற உள்ள நிலையில், மருத்துவக் கழிவுகளை எடுத்துச் செல்ல கேரளாவில் இருந்து ஆறு பேர் தலைமையிலான 70 பேர் கொண்ட குழுவினர் 16 லாரிகளுடன் நடுக்கல்லூர் வந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களுடன் தமிழக அரசு அதிகாரிகளும் இணைந்து கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளுக்குச் சென்றனர். இதையடுத்து தற்போது கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் 3 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் 3 லாரிகள் நிறுத்தப்பட்டு மருத்துவக் கழிவுகளை அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தமிழக சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.