நெல்லை | சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய ஆணி - நவீன முறையில் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!
செய்தியாளர்: மருதுபாண்டி
தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள வள்ளியூரை சேர்ந்தவர்கள் மைதீன் - தகாபீவி தம்பதியர். இவர்களது 8 வயது மகன் முகமது ஆரிப், விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 5 சென்டி மீட்டர் நீளமுள்ள கூர்மையான ஆணியை முழுங்கி விட்டார். இதையடுத்து அவர் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக சிறுவனின் பெற்றோர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்து மருத்துவமனை டீன் ரேவதிபாலன் உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர்கள், மருத்துவர் பாலசுப்பிரமணியன் கண்காணிப்பில் காது மூக்கு தொண்டை பிரிவு துறைத் தலைவர் ரவிக்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் நவீன சிகிச்சை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடத்தில் சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த ஆணியை அகற்றி சிறுவனின் உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்தனர்.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி பாலன் கூறுகையில்...
சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய ஆணியை நமது மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை நிகழ்த்தியுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக தென் தமிழகத்தில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது; சிறப்பான சிகிச்சை அளித்து நமது மருத்துவக் குழுவினர் சாதித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
சிறுவனின் தாய் தாகாபீவி கூறுகையில்...
”நெல்லை அரசு மருத்துவ மனையில் மருத்துவக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு எனது மகனின் மூச்சு குழாயில் சிக்கியிருந்த ஆணியை அகற்றி உயிரைக் காப்பாற்றி உள்ளனர். மருத்துவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தாய் தாகாபீவி கூறினார்.