நெல்லை | சக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ம் வகுப்பு மாணவன்.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!
செய்தியாளர்: மருதுபாண்டி
தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழமையான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது, இந்த நிலையில், பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரக்கூடிய பிரபல தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கிடையே சிறு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சக மாணவரை வெட்டியுள்ளார்,
இதனைக் கண்ட வகுப்பு ஆசிரியர் உடனடியாக மாணவரை தடுக்க முயற்சி செய்தபோது, அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது இதையடுத்து மாணவர், காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து காயமடைந்த ஆசிரியை மற்றும் பள்ளி மாணவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவ நடந்த இடத்தில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் வினோத் சந்தராமன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர் மற்றும் ஆசிரியரிடமும் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு குவிந்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.