40 ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள்.. என்ன நடக்கிறது..? விவரம்!
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1986-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையின் படி ஹரியானாவின் ஜஜ்ஜரிலும் மகாராஷ்ட்ராவின் அமராவதியிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. இப்போது தமிழகத்தை தவிர 28 மாநிலங்களில் 638 மாவட்டங்களில் 661 நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்கள் தொடக்கத்தில் நவோதயா பள்ளிகளை ஏற்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து மேற்குவங்கமும் அனுமதி அளித்தது.
நவோதயா பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் என மும்மொழி கொள்கை பின்பற்றப்படுவதால், இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாட்டில், இந்தி கட்டாயமாக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த பள்ளிகள் தொடங்க, தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கு எதிராக குமரி மகா சபா தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.
இதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது. நவோதயா பள்ளிகளில், தமிழ் மொழி கட்டாயமாக கற்றுத்தரப்படும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதன்காரணமாக, உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு ஏற்றால், 40 ஆண்டுகள் கழித்து நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

