தூத்துக்குடி செல்கின்றனர் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள்..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் தூத்துக்குடி செல்கின்றனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். போலீசார் அவர்களை தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் தூத்துக்குடி செல்கின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களில் ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு உடனடியாக தூத்துக்குடி செல்கிறது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக விளக்கம் கேட்டு அரசுக்கு ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு செல்கின்றனர். அங்கு பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அவர்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும் பொதுமக்களும் துப்பாக்கிச் சூடு குறித்த தங்களுக்கு தெரிந்த தகவல்களை அவர்களிடம் தெரிவிக்கலாம்.