வேலூர் | ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. தேசிய மகளிர் ஆணையம் முக்கிய உத்தரவு!
பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணித்த போதும் ஆண் ஒருவரால் பாலியல் துன்புறுத்தல் நடந்த விவகாரம் என்பது, தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பின் மீது கேள்விகளை எழுப்புவதாக தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வேலை செய்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்வதற்காக பெண்களுக்கான தனிப் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட தனிப்பெட்டியில் ஆண் பயணிகள் பயணம் செய்யக் கூடாது என்ற ரயில் பயண விதிமுறைகள் இருந்தும், அதனை மீறி பயணித்த ஆண் பயணி ஒருவர், ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதனால் அந்தப் பெண் கூச்சலிட முயன்ற போது, ஓடும் ரயிலிலிருந்து அந்தநபர் அவரை கீழே தள்ளி விட்டுள்ளார்.
தேசிய மகளிர் ஆணையம் முக்கிய உத்தரவு..
இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றச்செயலில் ஈடுபட்டவரின் புகைப்படம் மற்றும் அங்க அடையாளத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காட்டி, கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் படுகாயங்களோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம், தானாக முன்வந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் மகளிர் என ஒதுக்கீடு செய்யப்பட்ட தனி பெட்டியில் பயணித்த பெண்ணுக்கு ஆண் பயணி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் தமிழக டிஜிபிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதோடு, பி.என்.எஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும், இவ்வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை உட்பட விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.