'ஜெ.பேனர் கிழிப்பு; ஸ்டாலின் பேனருக்கு பாதுகாப்பு' - டிடிவியை சாடிய ‘நமது அம்மா’ நாளேடு
பசும்பொன்னில் தேவர் குருபூஜையின்போது அதிமுக பேனர்களை கிழித்தவர்கள், மு.க.ஸ்டாலின் பேனரை மட்டும் பாதுகாத்ததாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
நரியின் வேஷம் கலைஞ்சுபோச்சு என்ற தலைப்பில் பாடல் ஒன்று இன்றைய நமது அம்மா நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது முகம் காட்ட முடியாமல் பத்து வருடங்களாக ஒதுங்கி இருந்தவர், அவர் இறந்தபின் கட்சி தொடங்கியதாக டிடிவி தினகரனை மறைமுகமாகச் சாடியுள்ளது. ஜெயலலிதா இருந்தபோது அவரை எதிர்த்தவர்களையும், எடுத்தெறிந்த ஆட்களையும் சேர்த்துக்கொண்டு, கருணாநிதி பிறந்தநாளில் கட்சி அலுவலகம் திறந்ததாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
Read Also -> எப்போது பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு
தேவர் குருபூஜை அன்று ஜெயலலிதா உருவம் பதித்த பேனர் உள்ளிட்டவற்றை ஆட்களை வைத்து கிழித்தவர்கள், அங்குள்ள மு.க.ஸ்டாலின் பேனரை மட்டும் பாதுகாக்க ஆட்களை நிறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் துரோகிக்கு துணை நிற்கும் விரோதி யார் என்று விளங்கிவிட்டதாகவும், தேவர் குருபூஜை ஒரு தெளிவை தந்துவிட்டதாகவும் நமது அம்மா நாளேட்டில் விமர்சிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியான நிலையில், நமது அம்மா நாளேட்டில் இந்த விமர்சனம் வெளியாகி உள்ளது.