நாமக்கல்: வலிப்பு வந்தது போல் நடித்து திருட்டில் ஈடுபட்ட இருவர்; சில நிமிடங்களிலேயே நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: எம்.துரைசாமி
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பொன்னார் (31) என்பவர் நேற்று இரவு காட்டுபுத்தூரில் உள்ள தேங்காய் மண்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது நாமக்கல்லை அடுத்த அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி கணவாய்ப்பட்டி அருகே சாலை ஓரத்தில் ஒருவர் வலிப்பு வந்தது போல் கிடந்துள்ளார். அவரை காப்பாற்ற வேண்டுமென மற்றொருவர் பொன்னாரிடம் உதவி கேட்டுள்ளார்.
இதனை கண்ட பொன்னார் தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, தான் வைத்திருந்த தண்ணீர் மற்றும் இரும்பு பொருட்களை கொடுத்து அவர்களுக்கு உதவியுள்ளார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் திடீரென பொன்னாரை தாக்கி அவரிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பணம், செல்போன், இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவற்றை பறித்துக் கொண்டு அதே இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி தப்பி வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் தனியார் கல்லூரி அருகே வந்த போது சாலையோர மரத்தில் மோதியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட, மற்றொருவர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மோகனூர், நாமக்கல் காவல் துறையினர் விசாரணையில் மேற்கொண்டனர். அப்போதுதான் வழிப்பறியில் ஈடுபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த மாரி (25) என்பதும், மற்றொருவர் நாமக்கல்லைச் சேர்ந்த நவீன் (30) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் சென்னையில் ஒன்றாக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.