நாமக்கல் | கடன் தொல்லை - அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்ததாக கடிதம்.. இளைஞர் விபரீத முடிவு!
செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் செல்வகுமார் (எ) சக்தி (33). இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், கட்டனாச்சம்பட்டியில் சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று மதியம் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்ற சக்தி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தூக்கில் தொங்கியவாறு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ராசிபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடலை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சக்தி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.